ARTICLE AD BOX
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் அதிநவீன வசதிகளுடன் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களை இணைக்கும் திருச்சி மாவட்டத்தின் மத்திய பேருந்து நிலையம் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.
திருச்சி மாநகரை ஒப்பிடும்போது மத்திய பேருந்து நிலையம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய தேவையும் எழுந்தது. இருப்பினும் இடத்தேர்வு தொடர்ச்சியாக நடந்து வந்த நிலையில், தி.மு.க ஆட்சி அமைந்த பின் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சப்பூரில் ரூ.400 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை போல் எல்இடி ஸ்க்ரீன், புல்வெளி பரப்புகள், பூங்காக்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வந்தன. இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திருச்சியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தநிலையில், திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் முடிவுபெற உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் - பணியாளர்கள் - ஓட்டுநர்கள் - நடத்துனர்கள் மற்றும் வணிகர்கள் போன்றவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் குறித்து விரிவாக கேட்டறியப்பட்டது.
மேலும் எஞ்சிய பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதன்பின்னர் அமைச்சர் கே.என் நேரு. செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
ஒவ்வொரு இலாகாவிலும் என்னென்ன பணிகள் மீதமுள்ளது என்பதை அறிந்து, அதனை விரைவாக முடிக்க அனைவரையும் அழைத்து பேசினோம். பிப்ரவரி மாதத்திலேயே முடிக்க வேண்டிய பணிகள். மார்ச் மாதத்திலாவது முடிக்க வேண்டும் என்று வேகப்படுத்தி இருக்கிறோம். பேருந்துகளை பஞ்சப்பூர் வரை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மின்சாரம் மற்றும் ஒப்பந்தத்தாரர்களுடன் பேசி இருக்கிறோம். அவர்கள் மார்ச் 31 வரை நேரம் கேட்டார்கள். நாங்கள் மார்ச் இறுதியில் திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளதால், மார்ச் 15-க்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டாலும், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும். ஆம்னி பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்து புறப்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வு பணியின்போது மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், அரசு அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் உருவாக்கப்பட்டு வந்த வசதிகள் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், நகரும் படிக்கட்டுகள், லிஃப்ட் வசதி, ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்துகள் நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, ஓய்விடம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
அதேபோல் கழிவறை, கண்காணிப்பு கேமராக்கள், உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை போல் எல்இடி ஸ்க்ரீன், புல் வெளி பரப்புகள், பூங்காக்கள் அமைக்கும் பணிகளும் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளது. .
இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திருச்சியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.