ARTICLE AD BOX
மான, ரோசம் பாத்தா தொழில் பண்ண முடியுமா.. விஜய், கமல், சூர்யாவை கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நேற்று அதாவது, மார்ச் 14ஆம் தேதி தனது கட்சியான ஜன சேனா கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். அதாவது அவரது பேச்சு தமிழ்நாடு அரசின் இரு மொழிக் கொள்கை குறித்து எந்த புரிதலும் இல்லாத வகையில் இருந்தது. இதனால் அவரது பேச்சு, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் அமைதியாக இருப்பது தொடர்பாக, ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அதாவது நேற்றைய நிகழ்வில் பவன் கல்யாண் பேசும்போது, தென்னிந்தியாவில் இந்தி மொழியை திணிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அனைத்து மொழிகளும் நமது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். தமிழ்நாடு தொடர்ந்து இந்தியை எதிர்கிறது. தமிழர்களுக்கு இந்தி மொழி தேவையில்லை என்று சொல்கிறார்கள். இந்தியை வேண்டாம் எனக் கூறும் தமிழர்கள், ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? படத்தை இந்தியில் டப் செய்து, பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து பணம் வந்தால் மட்டும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள்.

பவன் கல்யாண்: தமிழ்நாடு இந்தி பேசும் பீகாரிலிருந்து வரும் தொழிலாளர்களை நம்பி உள்ளது. இப்படி பல காரணங்கள் இருந்தும் இருந்தும் இந்தியை வெறுக்கிறோம், எதிர்க்கிறோம் எனச் சொல்கிறார்கள்.தமிழ்நாடு இப்படி கூறுவது எப்படி நியாயமானதாக இருக்கும். நமது இந்தியா என்பது கோபப்படும்போது வெட்டி பிரித்துக் கொள்ளக் கூடிய கேக் துண்டா? நமது நாட்டின் ஒருமைப்பாட்டை குறைக்க முயற்சிப்பவர்கள் எதிர்க்க என்னைப் போன்ற கோடிக்கணக்கானோர் ஒன்றாக இணைந்து நிற்போம்" என பேசியிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன்:இவரது பேச்சு தற்போது அரசியல் தளத்திலும் திரைத்துறை தளத்திலும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர்களான கமல்ஹாசன், விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்டோர் எதுவும் கூறாமல் அமைதியாக உள்ளார்கள். அதனைக் குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன், அவர்கள் மூவரையும் கண்டித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, " மத்த ஸ்டேட்காரன் நம்மளை எவ்வளவு கழுவி ஊத்துனாலும் அமைதியா இருப்போம். வாயை விட்டா நம்ம படம் அங்க ஓடாது. அதுவும்.. ஆந்திராக்காரனை பகைச்சுக்கவே கூடாது. அதுதான் நம்மளோட முக்கிய கலக்சன் சென்டர். பவன் அண்ணே. நீங்க நல்லா திட்டுங்கண்ணே. மான, ரோசம் பாத்தா தொழில் பண்ண முடியுமா" என கேப்ஷன் இட்டு, ரஜினிமுருகன் படத்தில் வரும் காட்சியை பகிர்ந்துள்ளார்.

கமெண்ட்ஸ்: இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா கருத்து தெரிவிக்கவில்லை என்பதைக் காட்டிலும் அரசியல் கட்சி நடத்துகிற, கமல்ஹாசன் மற்றும் விஜய் உள்ளிட்டோர் எதுவும் வாய் திறக்காமல் உள்ளது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ப்ளூ சட்டை மாறன் கூறியதைப்போல், அவர்கள், தங்களது தொழிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அமைதியாக இருக்கிறார்கள் என இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
