மாநிலங்களவை ஒத்திவைப்பு: தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மறுத்ததால் அமளி

12 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் ஒன்றிய பாஜ அரசின் திட்டத்தால், தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறைந்து பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தங்கள் கவலையை தெரிவிக்க திமுக எம்பிக்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வேண்டுமென விதி 267ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை திமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு பள்ளி கல்விக்கான நிதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக எம்பி பி.வில்சன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். இதுதவிர வாக்காளர் பட்டியலில் மோசடி தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் வழங்கிய நோட்டீஸ் உட்பட 21 ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை அவை கூடியதும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்கக் கோரி கருப்பு சட்டையில் வந்திருந்த திமுக எம்பிக்கள் அவையில் கோஷமிட்டனர். இருப்பினும், பூஜ்ய நேரத்தில் இந்த விவகாரத்தை திமுக எம்பி கிரிராஜன் எழுப்ப அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது சிறிது நேரம் அமளி அடங்கியிருந்தது.

அதில் பேசிய எம்பி கிரிராஜன், ‘‘ தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால் அதனால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். அதே சமயம், குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத உபி, பீகார் போன்ற மாநிலங்கள் அதிக பலன் அடையும். கடந்த 30 ஆண்டாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தாதவர்களுக்கு பரிசு வழங்குவது போன்ற ஒன்றிய அரசின் செயல்முறை நியாயமற்றது’’ என்றார். மீண்டும் அமளியை தொடர்ந்ததால் அவை பகல் 12 மணி வரை 40 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

The post மாநிலங்களவை ஒத்திவைப்பு: தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மறுத்ததால் அமளி appeared first on Dinakaran.

Read Entire Article