ARTICLE AD BOX
ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் போது பெண்களுக்கு உடல் வலி, வயிற்று வலி என பலவிதமான அசௌகரியங்கள் ஏற்படும். முந்தைய காலங்களில் பெண்கள் வீட்டு விலக்கின் போது சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகளில் இருந்து முற்றிலும் விலகி தனியறையில் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். நான்கு நாட்கள் மாதவிலக்கு முடிந்த பின்பு தான் தங்களுடைய வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிப்பார்கள்.
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, அலுவலகம் என பலவிதமான பணிகளை மாதவிலக்கு நேரங்களிலும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். தன்னுடைய உடல் வலி, வயிற்று வலி போன்றவற்றை பொறுத்துக் கொண்டு இத்தனையும் அவர்கள் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் மாத விலக்கின் போது பெண்கள் இவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் அவர்களது உடல் வலி குறைகிறது என்றும், அவர்கள் மென்மையான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணமும், உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மாதவிலக்கு நேரத்தில் வரும் வலியின் அறிகுறிகள்:
வயிற்றில் கடுமையான வலி, தசைப்பிடிப்பு, உடல் வலி போன்றவை இருக்கும். மேலும் சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, தலைவலி, தலைசுற்றல் போன்றவையும் இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போது மேற்கண்ட வலிகள் எல்லாம் குறையும்.
மாதவிலக்கின் போது பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்:
மூட் ஸ்விங்ஸ் மாறுதல்:
பொதுவாக மாதவிலக்கின் போதும் அதற்கு முந்தைய ஒரு வாரக் காலகட்டத்திலும் பெண்களுக்கு மூட் ஸ்விங்ஸ் ஏற்படும். எப்போதும் எரிச்சலான மனநிலை, கோபம், சட்டென்று ஆத்திரம் போன்றவை ஏற்படும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது இந்த மனநிலை மாறி மகிழ்ச்சியான ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் மனம் மகிழ்ச்சியோடு இருக்கும். உடலுடைய ஆற்றலும் பெருகும். அவர்கள் மிதமான உடற்பயிற்சி, நடைப்பயிறசி, யோகா, மென்மையான ஏரோபிக்ஸ் போன்ற செயல்பாடுகள் மூலம் உடலையும் மனதையும் சோர்வடையாமல் உற்சாகமாக வைத்திருக்கலாம்.
மாதவிலக்கு நேரத்தில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது. அதனால்தான் பெண்கள் அந்த சமயத்தில் சிடுசிடுப்பாகவும் எரிச்சலுடனும் காணப்படுவார்கள். ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது அது ரத்தத்தில் உள்ள கார்டிசோலின் அளவை குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவும்.
உடல் வலியை, பிடிப்புகளைக் குறைக்கிறது:
உடற்பயிற்சி மாதவிடாய் பிடிப்புகளையும் அசௌகரியத்தையும் குறைக்க உதவும். ஏனென்றால் உடற்பயிற்சி செய்யும் போது உடல் எண்டார்ஃபின்களை வெளியிடும். இவை தசைப் பிடிப்புகளைக் குறைத்து மனநிலையை உற்சாகமாக மாற்றிவிடும். உடற்பயிற்சி செய்யும் போது அது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சீரான ரத்தம் உடல் முழுக்க பாயும்படி செய்யும். அதனால் உடல் வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புகளைக் குறைக்கும்.
ஒழுங்கற்ற மாத விலக்கை சரி செய்தல்:
சில பெண்களுக்கு மாதவிலக்கு சரியான சுழற்சி முறையில் இருக்காது. ஒவ்வொரு மாதத்திலும் தேதி தள்ளிப் போய், அல்லது இருபது நாட்களுக்கு ஒரு முறை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மாதவிலக்கு ஏற்படும். எனவே வாரத்திற்கு நான்கு நாட்களாவது உடற்பயிற்சி செய்து கொண்டு வரும்போது அது மாதவிலக்கு சுழற்சிகளை சீராக வைக்கும். மாதவிலக்கு நேரத்திலும் உடற்பயிற்சியைத் தொடர்வது சரியான சுழற்சியை ஏற்படுத்தும்.
மாதவிலக்கு நேரத்தில் பெண் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரோன் போன்றவை குறைவாக இருப்பதால் உடற்பயிற்சி செய்வது அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.
மாதவிலக்கு தொடங்கிய முதல் நாளிலிருந்து இரண்டு வாரங்கள் வரை உடற்பயிற்சி செய்வது உடல் வலிமை பெற சிறந்த நேரம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதிகமான வலி இருக்கும் மகளிர், தமது மருத்துவரை ஆலோசித்துப் பின் உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.