ARTICLE AD BOX
பள்ளி மாணவர்களுக்கு ”Good Touch, Bad Touch” குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மார்ச் 26-ம் தேதி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன், பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செயல்படும் வகையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் செயல்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
குற்றம் நிருப்பிக்கப்பட்டவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் பணி செய்ய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் காவல்துறை சான்றிதழ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தைகளுக்கு ”Good Touch, Bad Touch” குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை கண்டறியும் வகையிலும், மாணவர்களுக்கான ஆலோசனை குழு அமைப்பது குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் வரும் மார்ச் 26 ஆம் தேதி நடத்தப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் வெளிப்படையாக துன்புறுத்தல், பாலியல் சீண்டல் ஆகியவற்றை பற்றி புகார் அளிக்க உள்புகார் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் அழைப்பு மைய எண் : 14417, குழந்தைகள் மைய எண் - 1098, மகளிர் உதவி மைய எண் - 181 ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகள் அளவில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், 1 பள்ளி மேலாண்மைக்குழு பிரதிநிதி, ஆசிரியரல்லாத பணியாளர் மற்றும் தேவைப்பட்டால் வெளிநபர் ஒருவர் என 8 பேர் கொண்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.