மாசி மாத மயானக் கொள்ளை உற்சவம் - 'மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி' ஆலயம் - என்ன தொடர்பு?

2 hours ago
ARTICLE AD BOX

முன்னொரு காலத்தில் பிரம்மதேவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. தோற்றத்தில் சிவபெருமானைப் போல காட்சியளித்த பிரம்மன் ஒரு சமயம் கயிலைக்கு சென்றார். வந்திருப்பது சிவபெருமான் என்று நினைத்த பார்வதிதேவி பிரம்மனை வணங்கி அவருக்கு பாத பூஜை செய்தாள். அந்த சமயத்தில் சிவபெருமான் அங்கே வந்திட பார்வதிக்கு தனது தவறு புரிந்தது.

"சுவாமி! இவர் தங்களைப் போல தோற்றமளித்ததால் தான் தவறாக புரிந்து கொண்டு பூஜை செய்தேன். ஆனால் இவர் அதற்கேதும் மறுப்பு தெரிவிக்கவில்லை. தான் பிரம்மதேவன்தான் என்றும் எனக்கு உணர்த்தவில்லை," என்று பார்வதி தேவி சிவனிடம் அழாக்குறையாக முறையிட்டாள்.

சினமடைந்த சிவபெருமான் பிரம்மனது ஐந்தாவது தலையை கொய்து எறிந்தார். இதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. கீழே விழுந்த அந்த ஐந்தாவது தலை சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. தனது கணவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை அறிந்து சரஸ்வதி தேவி கோபமுற்று "பிரம்மஹத்தி தோஷத்தால் மயானம் தோறும் அலைந்து திரிவீராக" என்று சிவபெருமானை சபித்தாள். தனது கணவனின் தலை கொய்யப்பட காரணமாக இருந்த பார்வதி தேவியை, "நீ செடி கொடிகளைஅணிந்து கோர ஸ்வரூபமாய் கானகத்தில் அலைந்து திரிவாயாக" என்றும் சபித்தாள்.

பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட பெருமானின் கையில் விழும் உணவை அவர் கையில் ஒட்டிக் கொண்டிருந்த பிரம்ம கபாலம் புசிக்கத் தொடங்கியது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் இறைவன் பசி தாகத்துடன் காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார். பார்வதி தேவி ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டு சாப விமோசனத்திற்கான வழியைக் கேட்டாள்.

இதையும் படியுங்கள்:
உலகப் புகழ்பெற்ற மூன்று முருகன் கோயில்கள்!
மாசி மாத மயானக் கொள்ளை உற்சவம்

அவர் கூறியபடி, சிவபெருமானுடன் தண்டகாரண்யம் என்னும் இடத்தை அடைந்து அங்குள்ள மயானத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்குமாறு கூறினாள். பெருமான் அங்கே ஒரு தீர்த்தம் உண்டாக்கினார். அது அக்னி தீர்த்தம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அப்போது பார்வதி தேவி பல்வகை உணவுகளை அங்கே சூரையிட்டாள். சிவபெருமான் கையில் உள்ள கபாலம் அந்த உணவை உண்பதற்காக சிவனின் கையை விட்டு கீழே இறங்கியது. சிவன் அங்கேயுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். கபாலம் உடனே தேவியைப் பற்றிக் கொள்ள தேவி விஸ்வரூபம் எடுத்து அந்த கபாலத்தை காலால் அடித்து நொறுக்கி அதைத் தன் கழுத்தில் மாலையாகப் போட்டு அங்காள பரமேஸ்வரியாகக் காட்சியளித்தாள்.

இந்த நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 'மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி' ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இது செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சிறப்பு மிக்க அங்காள பரமேஸ்வரி அம்மன் குடி கொண்டிருப்பது மேல்மலையனூர் திருத்தலத்தில். அன்னை அங்கே மல்லாந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

இந்த நிகழ்வு நடந்தது மகா சிவாரத்திரிக்கு அடுத்த அமாவாசை தினத்தன்று. தற்போது இந்த அங்காளம்மன் தமிழ் நாட்டில் பல பகுதிகளில் கோவில் கொண்டு அங்காள பரமேஸ்வரி என்னும் திருநாமத்துடன் அருள் வழங்கி வருகிறாள். இந்த அம்மன் கோவில் கொண்டுள்ள எல்லா இடங்களிலும் மாசி மாத அமாவாசையன்று மயானக் கொள்ளை என்னும் பெயரில் சூரையிடுவது நடைபெறுகிறது. அன்று அம்பாள் பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்டாள். இன்றும் எல்லா துஷ்ட சக்திகள் பேய், பிசாசுகளுக்கு அன்று அம்மன் உணவை சூரையிடுவது நடைபெறுகிறது. அந்த உணவை உண்டு அந்த துஷ்ட சக்திகள் அந்த இடத்தை விட்டு நீங்கி விடுவதாக ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
பிறவிப் பிணியை போக்கும் சிவமந்திரம்!
மாசி மாத மயானக் கொள்ளை உற்சவம்

சூரையிடும் பக்தர்கள் தாங்களும் அங்காள பரமேஸ்வரி, காட்டேரி, பாவாடைராயன் போன்ற வேடங்களில் ஆவேசமாக ஆடிக்கொண்டே வந்து மயானத்தில் சூரையிடுவது இந்த விழாவின் சிறப்பு. அன்று தீய சக்திகளை அன்னை அடித்து விரட்டுவதாக ஐதீகம்.

26.02.25 சிவராத்திரி அன்று தொடங்கும் இந்தத் திருவிழா ஊஞ்சல் சேவை, கடைசியாக விடையாற்றி உற்சவம் என்று 10.03.25 அன்று முடிவுறுகிறது. தமிழகமெங்கும் உள்ள எல்லா அங்காளபரமேஸ்வரி ஆலயங்களிலும் மாசி மாத அமாவாசையன்று மயானக் கொள்ளை உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

Read Entire Article