ARTICLE AD BOX
டெஸ்லா இந்தியாவிற்குள் நுழைய முழுமையாக தயாராக உள்ளது. இது கார் ஆர்வலர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் டெஸ்லா கார் குறித்து ஒரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து சிஎல்எஸ்ஏ என்ற நிறுவனத்தின் அறிக்கையில், ”சமீபத்தில் இறக்குமதி வரி 20 சதவீதத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், டெஸ்லா நிறுவனத்தின் மலிவான காரின் ஆரம்ப விலை ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லாவின் ஆரம்ப மாடல் 3 தற்போது அமெரிக்காவில் சுமார் 35,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 30.4 லட்சம்) விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டு உள்ளதோடு, சாலை வரி, காப்பீடு போன்ற பிற செலவுகளையும் கருத்தில் கொண்டு, இந்த மாடலின் ஆன்-ரோடு விலை சுமார் 40,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 35-40 லட்சம்) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் டெஸ்லா மாடல் 3-ன் விலை மஹிந்திரா எக்ஸ்இவி- 9இ, ஹூண்டாய் இ-கிரெட்டா மற்றும் மாருதி சுசுகி இ-விட்டாரா போன்ற உள்நாட்டு மின்சார கார்களைவிட 20-50 சதவீதம் அதிகம்.இந்நிலையில், டெஸ்லா இந்திய மின்சார வாகன சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. டெஸ்லா ரூ.25 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் மாடலை அறிமுகப்படுத்தி, சந்தையின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கு நீடிக்க முடியும்.
டெஸ்லாவின் இந்தியா வருகை இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனென்றால், சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற பிற சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை குறைவாகவே உள்ளன. டெஸ்லா நிறுவனம் விரைவில் டெல்லி, மும்பை போன்ற பெரிய நகரங்களில் தனது மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
இந்தியாவின் மின்சார வாகனக் கொள்கையின் கீழ், டெஸ்லா நிறுவனம் ஆண்டுதோறும் 8,000 யூனிட்கள் வரை இறக்குமதி கட்டணத்தில் 15 சதவீதம் குறைப்பு பெறலாம். இந்திய வாடிக்கையாளர்கள் விலைகளை அதிகம் சிந்திப்பவர்கள். டெஸ்லா சரியான விலையை முடிவு செய்யவில்லை என்றால், இந்திய சந்தையில் அது சிரமங்களை சந்திக்க நேரிடும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.