ARTICLE AD BOX
குரூப் ஏ-வை பொறுத்தவரையில், 2 லீக் போட்டிகளின் முடிவிலேயே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கான தகுதியை உறுதிசெய்துவிட்டன. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இரண்டு அணிகளும் கடைசி லீக் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.
இந்த சூழலில் தான் குரூப் பி- பிரிவில் இருக்கும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் என 4 அணிகளுக்குமே அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
7வது லீக் போட்டியாக பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவிருந்தன. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே மழைபெய்ததால், டாஸ் போடாமல் ஆட்டம் தள்ளிப்போனது. தொடர்ந்து மழை நிற்காததால், குறைவான ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால் இறுதிவரை மழை அதற்கான எந்த வாய்ப்பையும் கொடுக்காததால், ஆட்டம் கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்குமே தலா 1 புள்ளி என பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் நீடிக்கின்றன.
4 அணிகளுக்குமே வாய்ப்பு..
இந்த சூழலில் முதல் லீக் போட்டியில் தோற்றிருந்தாலும் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு அணிகளும் மீதமிருக்கும் 2 போட்டிகளில் வென்றால் 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்யும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் கடைசி லீக் போட்டியில் தோற்றால் தொடரிலிருந்தே வெளியேறும் நிலைக்கு செல்லும்.
இந்நிலையில் தான் மழையால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது, குரூப் பி பிரிவில் இருக்கும் 4 அணிகளுக்குமே அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை நடக்கவிருக்கும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன, இதில் வெற்றிபெறும் அணிக்கு செமிஃபைனல் செல்வதற்கான வாய்ப்பு மேலும் பிரகாசமடையும் என்பதுகுறிப்பிடத்தக்கது.