ARTICLE AD BOX
ராவல்பிண்டி: மழையின் தயவால், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு புள்ளி கூட பெறாமல் வெளியேறும் மோசமான நிலையில் இருந்து பாகிஸ்தான் அணி தப்பி இருக்கிறது. சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தியது.
அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் உற்சாகத்தில் இருந்தது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக முதலில் விளையாடி தோல்விகளை அடைந்தது. அதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.

அடுத்து, வங்கதேச அணிக்கு எதிரான தனது கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் விளையாட இருந்தது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்றால், ஒரு புள்ளி கூட பெறாமல் வெளியேறும் நிலையில் இருந்தது. கடைசியாக நடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சாம்பியன் அணியான பாகிஸ்தான், அடுத்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு புள்ளி கூட பெறாமல் வெளியேறியிருந்தால், அது வரலாற்றிலேயே மோசமான நிகழ்வாக அமைந்திருக்கும்.
ஆனால், மழையின் தயவால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது. இதை அடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அதனால், பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் 2025 சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அதே சமயம், சில மோசமான சாதனைகளையும் செய்துள்ளது.
கென்யாவுக்கு அடுத்ததாக, சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் ஒரு அணி, ஒரு வெற்றி கூட பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியிருக்கும் நிகழ்வு நடந்துள்ளது. முன்னதாக, 2000-ஆம் ஆண்டு கென்யா அணி தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து தொடரை நடத்தியது. அப்போது கென்யா ஒரு வெற்றி கூட பெறவில்லை.
பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டி ரத்து.. கடுப்பான அம்பயர்கள்.. இரு அணிகளுக்கும் எத்தனை புள்ளிகள்?
அதன் பின் தற்போது 2025-இல் பாகிஸ்தான் அணி தொடரை நடத்தும் அணியாக இருந்தும் ஒரு வெற்றி கூட பெறவில்லை. அதேபோல, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து, முந்தைய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியனாக இருந்து, நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறிய இரண்டாவது அணி என்ற பெயரையும் பெற்றிருக்கிறது பாகிஸ்தான்.
2009 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ஆஸ்திரேலியா, 2013 சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் சுற்றுடன் வெளியேறியிருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவும் குரூப் சுற்றில் ஒரு புள்ளி மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகிஸ்தான் அணியும் ஒரு புள்ளி மட்டுமே பெற்று இருக்கிறது.
மேலும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற எட்டு அணிகளில், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மற்ற ஏழு அணிகளில் ஒருவராவது சதம் அடித்துள்ளனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணி தனிப்பட்ட வீரர்கள் சார்பிலும், ஒட்டுமொத்த அணியாகவும் பல மோசமான சாதனைகளை செய்து இந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. இந்த மோசமான தோல்விகளால், இனி பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறையும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.