ARTICLE AD BOX
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் வீடியோவில், மலச்சிக்கலை குறைப்பதற்கு எளிமையான வழி எனக் கூறப்பட்டு, ஒரு செயல்முறை பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி, ஒரு கால் மீது மற்றொரு கால் போட்டு அமர்ந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று பரவி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Can crossing your legs instantly relieve constipation?
இது தொடர்பாக, இன்ஸ்டாகிராமில் மருத்துவர் கரண் ராஜன் பதிவிட்டிருந்தார். அதில், "நீங்கள் வேகமாக மலம் கழிக்க விரும்பினால், இதை முயற்சிக்கவும். இந்த முறை நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. ஆனால், சில சூழலில் விரைவாக மலம் கழிக்க இந்த முறை உதவியாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்த தகவல்களை, பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் மருத்துவர் பிரணவ் ஹொன்னவரா சீனிவாசன் விவரித்துள்ளார். "நீங்கள், உங்கள் கால்களை தரையில் தட்டையாக வைத்து உட்காரும் போது, மலக்குடல் மற்றும் ஆசனவாய் இடையே உள்ள கோணம் ஒப்பீட்டளவில் கூர்மையாக இருக்கும். இது மலம் கடந்து செல்வதை கடினமாக்குகிறது. ஆனால், ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு அமர்வது இடுப்புத் தசைகளை தளர்த்தி, மலம் கழிப்பதை எளிதாக்குகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு அமரும் போது உள் வயிற்றில் அழுத்தம் ஏற்படுகிறது. இவை, மலம் வெளியேறுவதை எளிதாக மாற்றுகிறது. "ஆனால், இந்த முறை குறித்த அறிவியல்பூர்வ ஆதாரங்கள் பெரிய அளவில் இல்லை. எனினும், இவை சிலருக்கு பலன் அளிக்கலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.
மலச்சிக்கலின் தீவிரம்: நீங்கள் லேசான மலச்சிக்கலை அனுபவித்தால், இந்த நுட்பம் சிறிது நிவாரணம் அளிக்கலாம். இருப்பினும், கடுமையான அல்லது நாள்பட்ட மலச்சிக்கலுக்கு, இது ஒரு முழுமையான தீர்வாக இருக்க வாய்ப்பில்லை.
அடிப்படை காரணங்கள்: உங்கள் மலச்சிக்கலின் முதன்மையான காரணம் முக்கியமானது. இது உணவு முறை, வாழ்க்கை முறை அல்லது மருத்துவ நிலை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்தால், இந்த முறை குறைவான பலையே தரும்.
தனிப்பட்ட உடல் அமைப்பு: ஒவ்வொருவரின் உடலும் வேறுபட்டது. உங்கள் இடுப்பின் வடிவம் மற்றும் உங்கள் உள் உறுப்புகளின் நிலைப்பாடு ஆகியவற்றைக் குறித்து இது அமையும்.
இந்த நுட்பத்தை தவறாமல் முயற்சிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், இது மலச்சிக்கலுக்கான நீண்ட கால தீர்வாகவோ அல்லது தடுப்பு நடவடிக்கையாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்று டாக்டர் சீனிவாசன் வலியுறுத்துகிறார்.