ARTICLE AD BOX
மருத்துவ பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு.. பட்ஜெட் 2025-ஐ நம்பியிருக்கும் சுகாதாரத் துறை..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதியன்று எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாக இத்துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குடும்பங்களன் நிதி சுமையை குறைக்க, மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் மருத்துவமனை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும் சமீபகாலமாக கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
கிராண்ட் தோர்ன்டன் பாரத் நிறுவனத்தின் பானு பிரகாஷ் கல்மத் கூறுகையில், மருத்துவ துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், குறிப்பாக, அடிப்படை வசதிகள் கூட குறைவாக உள்ள பகுதிகளில் மருத்துவ சேவையை விரிவுப்படுத்தவும் நாட்டின் மொத்த உள்நாட்டி உற்பத்தியில் 2.5 சதவீதம் அளவுக்கு சுகாதார செலவினங்களை அதிகரிப்பது அவசியம். வசதிகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த முதலீடு உதவும் என்று தெரிவித்தார்.
முதியோர் உரிமைகளுக்காக போராடும் அரசு சாரா நிறுவனமான ஏஜ்வெல்லின் தன்னார்வலர்கள் கூறுகையில், மூத்த குடிமக்களிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், மருத்துவ ஆலோசனை நோயியல் சோதனைகளை சேர்க்க வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கான தள்ளுபடி அட்டைகள், மூத்த குடிமக்களுக்கான டயப்பர்கள், மருந்துகள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற மூத்த குடிமக்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். மேலும் மூத்த குடிமக்களை பிஎம்ஜேஏஒய்-ல் சேர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.
சீமென்ஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹரிஹரன் சுப்பிரமணியன் கூறுகையில், மருத்துவ சாதனங்களுக்காக இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பது, நாட்டின் புதுமை சூழல் அமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசர தேவையை வெளிப்படுத்துகிறது. மருத்துவ சாதனங்களின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவெடுக்க தேவையான ஆற்றல் இங்கு உள்ளது என்று தெரிவித்தார்.
ஸ்டார் இமேஜிங் அண்ட் பாத் லேப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சமீர் பாட்டி கூறுகையில், கோவிட்19 தொற்றுநோய், நோயை முன்கூட்டியே கண்டறிந்து நிர்வகிப்பதில் நோய் கண்டறிதலின் (பரிசோதனை) மதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மூன்றில் இரண்டு பங்கு பரிசோதனை வசதிகள் நகரங்களில்தான் உள்ளன.
மருத்துவ அஜண்டாவை முன்னெடுக்க நவீனமயமாகி வரும் பரிசோதனைகள் அடிப்படையானவை. நம் நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீத அளவுக்கே செலவிடுகிறது. அதேசமயம் சர்வதேச அளவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சராசரி செலவினம் 2.2 சதவீதமாக உள்ளது. ஆராய்ச்சியில் முதலீடு செய்தால், துல்லியமான மற்றும் செயல்திறனுக்கான மரபணு அடிப்படையிலான சோதனை உள்ளிட்ட மாற்றத்தக்க தொழில்நுட்பங்களை கொண்டு வரக்கூடும் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian