ARTICLE AD BOX
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி (73), பல்வேறு மொழி படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இன்றைய இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் கைவசம் பல புதுப்படங்களை வைத்திருக்கும் அவர், மகேஷ் நாராயணன் இயக்கும் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மம்மூட்டிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே, ‘மம்மூட்டிக்கு புற்றுநோய்’ என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவி, திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்தது. ‘மம்மூட்டிக்கு என்ன ஆயிற்று?’ என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ‘கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். அதற்குள் மம்மூட்டிக்கு கேன்சரா?’ என்று ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வருத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார். தற்போது ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால், நடிப்பில் இருந்து சிறிது ஓய்வெடுத்து வருகிறார். எனவே, அவருக்கு புற்றுநோய் என்று வெளியாகும் தகவல்கள் பொய். அவர் லீவு எடுத்துக்கொண்டு ரெஸ்ட்டில் இருப்பதால் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. ஓய்வு முடிந்த பின்பு, மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து மம்மூட்டி நடிப்பார்’ என்று கூறியுள்ளனர்.