ARTICLE AD BOX
மத்திய அமைச்சர்கள் கடந்த 2024ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை இன்னும் நிறைவேற்றவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவைில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கேள்வி எழுப்புகையில் “ மத்திய அமைச்சர்கள் கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர்” என்று கேட்டிருந்தார்.
இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ”கடந்த 2024ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் சார்பில் 160 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில் 39 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. 119 வாக்குறுதிகள் நிலுவையில் இருக்கின்றன.
2018ம் ஆண்டு வாக்குறுதிகளை கண்காணிக்கும் சிஸ்டம் ஆன்லைனில் வந்தபின் 99 % கோரிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன. குறைவான சில வாக்குறுதிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அனைத்து விதமான வாக்குறுதிகளும் அடுத்த 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும். இது நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது ஒரு கறையாக இருக்கும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து புரிந்து கொண்டோம். நாடாளுமன்ற எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினால், அரசு பதில் அளிக்க வேண்டும். முக்கியமானது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்து அமைச்சர்களும் தங்களின் வாக்குறுதிகளை 3 மாதங்களில் நிறைவேற்றுங்கள் என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். இதை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கு ஆம்ஆத்மி எம்.பி. இடைமறித்துப் பேசுகையில், “99 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். ஆனால், ஆன்லைனில் இன்னும் 1,324 வாக்குறுதிகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளதே” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கிரண் ரிஜிஜூ, “எந்த இணையதளத்தில் இருந்து இந்த தகவலை எடுத்தீர்கள் எனத் தெரியவில்லை. நான் சரிபார்த்துக் கூறுகிறேன். 1947ம் ஆண்டிலிருந்து தகவலை எடுத்தால் அது எப்படி உங்களுக்கு சரியாக வரும். மக்களவையில் 764 வாக்குறுதிகளும், மாநிலங்களவையில் 547 வாக்குறுதிகளும் நிலுவையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.