ARTICLE AD BOX
ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ஏர் இந்தியா விமானத்தில் போபாலில் இருந்து தலைநகர் தில்லிக்கு சனிக்கிழமை பயணித்தார். அப்போது விமானத்தில் அவருக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
ஏர் இந்தியா விமானத்தில் எனது இருக்கையில் அமர்ந்தபோது அது உடைந்து உள்ளே சென்றுவிட்டது. இதுகுறித்து விமான ஊழியர்களிடம் கேட்டதற்கு, அந்த இருக்கை நன்றாக இல்லை எனக் கூறி அதன் டிக்கெட்டை விற்க வேண்டாம் என்று நிர்வாகத்திற்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதாக கூறினர்.
ஒரு இருக்கை மட்டுமல்ல இன்னும் பல இருக்கைகள் அப்படிதான் இருந்தன. இதனை அறிந்த சக பயணிகள் நல்ல இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டனர். ஏன் மற்றொரு நண்பரை தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்து அதே இருக்கையில் எனது பயணத்தை முடிக்க முடிவு செய்தேன்.
டாடாவிடம் ஏர் இந்தியா நிர்வாகம் சென்ற பிறகு அதன் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என்பது புரிகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமத்தை எந்தவொரு பயணியும் எதிர்கொள்ளாமல் இருக்க ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்புக் கேட்டு, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் விமான நிறுவனத்திடம் இருந்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கை கோரியுள்ளது.