ARTICLE AD BOX
மதுரை: மதுரை ரயில் நிலையம் முன்பு சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட மீன் சிலை மீண்டும் நிறுவப்பட்டு திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. மதுரை ரயில்நிலைய நுழைவு பகுதியில் பாண்டிய மன்னர்களின் அடையாளமான மீன் சின்னம் வைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் முன்னதாக அப்போதே ரூ.8 லட்சம் செலவில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்தபதிகளைக் கொண்டு இச்சிலை வடிவமைக்கப்பட்டது.
15 அடி உயரம், 3 டன் எடையில் நீரூற்றுடன் 3 மீன்கள் ஒன்றன் மீது ஒன்றாக காட்சியளிக்கும் வகையில் வாட்டர் பவுண்டைனுடன் கூடிய இந்த வெண்கல மீன் சிலை மதுரையின் ஓர் அழகு அடையாளப் பெருமைக்குரியதாக இருந்தது. ரயில்நிலைய முன்பகுதியை அழகூட்டும் வகையில் இருந்த இச்சிலை, ரயில் நிலைய பராமரிப்பு பணிக்கென அகற்றப்பட்டது. ஆனால் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படவில்லை. இச்சிலை பகுதியை பராமரித்து வந்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் தொடர் கோரிக்கை வைத்தனர்.
மீண்டும் அதே இடத்தில் சிலை வைக்கக் கோரி தீரன்திருமுருகன் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மெட்ரோ ரயில் திட்டத்தால் இப்பகுதியில் சிலை வைக்க வாய்ப்பில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், ஐகோர்ட் கிளை உத்தரவில் குழு அமைத்து, மதுரை மாநகராட்சி சார்பில் இடங்கள் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் இச்சிலையை மதுரை மாநகராட்சியிடம் ஒப்படைத்தது. மதுரை தமுக்கம் உள்ளிட்ட 3 இடங்கள் தேர்வு செய்து அங்கு இச்சிலையை நிறுவ கோரப்பட்டது. இந்நிலையில் இந்த மீன் சிலை தற்போது மதுரை செல்லூர் ரவுண்டானா பகுதியில் நிறுவப்பட்டு, அழகூட்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் அடையாளம் கொண்ட இந்த மீன் சிலைக்கு பீடம் அமைத்து நிறுவி, அழகு படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில் மக்கள் பார்வைக்கு திறக்கப்படும்’’ என்றார்.
The post மதுரையில் மீண்டும் மீன் சிலை: செல்லூர் ரவுண்டானா பகுதியில் ஏற்பாடு appeared first on Dinakaran.