ARTICLE AD BOX
"சைக்கிளுக்கு 50 ரூபா, பைக்கிற்கு 100 ரூபா, காருக்கு 300, லாரிக்கு 500, ரயிலுக்கு 1000, பிளைட்டுக்கு 5000 ரூபா" என்று வைகைப்புயல் வடிவேலு ஒரு திரைப்படத்தில் டோக்கன் போடச்சொல்வது செம காமெடியாக இருக்கும்.
அதுபோல் வீட்டு விலங்குகள் வளர்ப்பதற்கு மதுரை மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளார்கள்.

மதுரை மாநகராட்சியின் 36-வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்களும், துணை மேயரும், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட எம்.எல்.ஏக்களும் பல்வேறு கோரிக்கைகளையும், புகார்களையும் கூறினார்கள். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், கால்நடை மற்றும் பிராணிகளை வளர்க்க உரிமம் பெற கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வகையில், மாடு, பன்றி வளர்க்க ரூ 500 ;நாய், பூனைக்கு ரூ 750; ஆடு வளர்க்க ரூ.150 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பு மதுரை மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கெனவே ஆண்டுக்கு 10 ரூபாய் உரிமக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும்போது, இப்படி 50 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது ஏன்? பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ள நிலையில், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் சாமானிய மக்கள் வளர்க்கும் கால்நடைகள் மீது அதிகமான உரிமக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது மோசமான நடவடிக்கை என்கிறார்கள்.
இது உடனே நடைமுறைக்கு வரவில்லை, மக்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்த கட்டண விகிதம் பின்பு மாற்றி அமைக்கப்படலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Volkswagen: ``97% இறக்குமதி, $ 1.4 பில்லியன் வரி ஏய்ப்பு..'' -சுங்க வரித்துறை கிடுக்கிப்பிடி விசாரணைVikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
