ARTICLE AD BOX
செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாதந்தோறும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஆய்வு மேற்கொண்டார். அப்போது எலி மருந்துகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு:
இதனையடுத்து வேளாண் துறை அதிகாரிகள் மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட எலி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதுபோன்று பொதுமக்கள் எளிதாக பெரும் வகையிலான எலி மருந்துகள் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் இதன் அடிப்படையில், மதுரை மண்டல வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமையில் வேளாண்மை அதிகாரிகள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உள்ளடக்கிய குழுவினர் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள், மளிகை கடைகள், சிறிய அளவிலான பெட்டி கடைகள் என 67 இடங்களில் நேற்றும் இன்றும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட 9 கிலோ எலி மருந்துகள் பறிமுதல்:
ஆய்வின் போது மளிகை கடைகளில் 1968ஆம் ஆண்டு பூச்சிமருந்து சட்டத்திற்கு உட்படாத, தடை செய்யப்பட்ட 9.1 கிலோ எலி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. எலி கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய மத்திய பூச்சிக் கொல்லி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு அதன் விபர படி உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு உரிமம் அவசியம். மளிகை கடைகள். மற்றும் பெட்டி கடைகளில் வீட்டு உபயோகத்திற்கு என்று குறிப்பிட்டுள்ள அளவுகளில் எலி மருந்துகளை விற்பனை செய்யலாம்.
வேளாண்துறை அதிகாரிகள் அறிவுரை:
அவ்வாறு விற்பனை செய்யப்படும் எலி மருந்துகள் 1968 பூச்சி மருந்து சட்டத்திற்கு உட்பட்டு உரிய முறையில் பேக்கிங் செய்யப்பட்டு, வீட்டு உபயோகத்திற்கு என்ற Label (Household Insecticide) பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர். பொதுமக்கள் வீடுகளில் எலிகளை கட்டுப்படுத்திட பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் மளிகை கடைகள். பெட்டி கடைகளில் அனுமதிக்கப்பட்ட (மூ ஜிங் பாஸ்பைடு) அளவிலான மருந்துகளா? என்பதை கவனித்து வாங்கி உபயோகிக்க வேண்டும்.
எலி மருந்து விற்பனை தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விதிமீறல்களில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது 1968 பூச்சி மருந்து சட்டத்தின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேளாண்துறை இணை இயக்குநர் சுப்புராஜ் பேசியபோது...
மதுரை மாவட்டத்தில் எலி மருந்துகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி மாவட்டம் முழுவதிலும் மருந்து கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தடை செய்யப்பட்ட 9 கிலோ மருந்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.
எலி மருந்து விற்பனை செய்ய கடும் கட்டுப்பாடு:
ஒவ்வொரு கடைகளுக்கும் அனுமதிக்கப்பட்ட எலி கொல்லி மருந்து தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதுபோன்ற மருந்துகளை வாங்கும் போது உரிய ரசீதுடன் வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களுடைய முழு விவரமும் கேட்டறிந்த பின்பு எலி மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் மதுரை மாவட்டத்தில் எலி மருந்துகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயலும் நபர்களின் எண்ணிக்கை தடுக்கும் விதமாகவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.