ARTICLE AD BOX
இதிகாசங்களில் ராமாயணமும், மகாபாரதம் இரு பெரும் காவியங்கள். அவற்றின் ஒவ்வொரு வார்த்தையும் படித்து இன்புறத் தக்கது. இரண்டு பெரும் காப்பியங்களிலும் பெண்களின் மாண்பை எடுத்துக் கூறும் அழகு தனித்துவம் மிக்கது. அவற்றுள் மண்டோதரியின் சிறப்பைப் பற்றி பரவலாக நாம் கேள்விப்பட்டது உண்டு.
தசரத மகாராஜா மிகச்சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தபோது, ஒரு நாள் நாரதர் அவர் முன் தோன்றி, தென் கோசல நாட்டுக்கும், வட கோசல நாட்டுக்கும் திருமண சம்பந்தம் ஏற்பட்டால் நல்ல பலன்கள் விளையும்; நாடு பலம் பெற்று எதிரிகளால் ஜெயிக்க முடியாததாக விளங்கும் என்று ஆலோசனை கூறினார்.
உடனே அரசவையில் இருந்தவர்கள் பெரும் முயற்சி செய்து தென் கோசல நாட்டு மன்னன் மகள் கௌசல்யாவை வடகோசலா நாட்டு மன்னன் தசரதருக்கு மணம் பேசித் திருமணம் செய்ய நாள் குறித்தனர்.
இந்தத் திருமணத்திற்கு முதல் காரணமான நாரதர் ராவணனிடம் சென்று, 'தசரதனுக்கும் கௌசல்யாவுக்கும் திருமணம் நடக்கப்போகிறதாமே உனக்கு தெரியாதா?', என்றார். அதற்கு ராவணனும், 'அதனால் என்ன? நடந்து விட்டுப் போகட்டும்' என்றான். அதற்கு நாரதரோ, 'ராவணா அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை உனக்கு எதிரி. அந்தக் குழந்தையின் கையால் உனக்கு மரணம்,' என்று எச்சரிக்கை மணி அடித்து விட்டுச் சென்றார்.
இவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை தானே நமக்கு எதிரி. இந்தத் திருமணத்தையே நடக்க விடாமல் செய்து விட்டால் குழந்தை எப்படி பிறக்கும் என்று கொக்கரித்தவனாய் திருமண மண்டபத்தை தேடி ஆகாய வீதியில் வந்தான். தனது கணவனால் திருமணம் தடைபட்டு நின்று விடுமோ, சுப காரியம் தடைபடக்கூடாது என்று பயந்த மண்டோதரியும் அவன் பின்னே சென்றாள்.
இரு கோசல நாடுகளும் இணைந்தால் கோசல நாடு பலம் பெற்றதாகிவிடும். ஆகவே திருமணத்தை நடத்த விடாமல் தடுக்கக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையோடு திருமண மண்டபம் கடல் நடுவில் மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது ஆகாய மார்க்கமாக வந்த ராவணன் அந்த மண்டபத்தை பார்த்து கீழே இறங்கினான். ஆத்திரத்தில் மண்டபத்தை உடைத்தான். மண்டோதரி எவ்வளவோ தடுத்தும் இயலவில்லை. மண்டபம் தூள் தூளானது.
நாரதர் ராவணனுக்கு தெரியாமல் தசரதரையும் கௌசல்யாவையும் தண்ணீருக்கு அடியில் அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்து விட்டதை அறிந்த ராவணன் தசரதரை பிடித்து இழுத்துக் கொல்ல முயன்றான். மண்டோதரி தேவியோ குறுக்கே பாய்ந்து இராவணனைத் தடுத்து நிறுத்தி, 'இவர்களுக்குப பிறக்கப் போகும் குழந்தை தானே எதிரி. இவர்கள் என்ன பாவம் செய்தார்கள். இவர்களை ஏன் கொல்ல வேண்டும். புதுமண மக்கள் சந்தோஷமாக இருக்கட்டும். அடுத்தவர்களின் சந்தோசத்தை கெடுக்காதீர்கள். அது பாவம்,' என்று கூறி தன் கணவனைத் தன்னோடு அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றாள்.
இந்தத் திருமணத்தால்தான் தன் மாங்கல்யம் பரிபோகப் போகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தும் கூட பிறரை துன்புறுத்த அவள் விரும்பவில்லை. தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் கூட உண்மையை உணர்ந்து உயிர்களிடத்தில் அன்பை வெளி காட்டியவள் மண்டோதரி. நல்லறிவு, நல் நினைவு, நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்வு, நன் முயற்சி, நல் விழிப்பு, நல் ஒருமை என்ற எண் வகை நெறிகளோடு வாழ்ந்தவள் மண்டோதரி. எவ் உயிருக்கும் துன்பமோ ஆபத்தோ விளைவிக்கக் கூடாது என்று எண்ணி தனது கணவனுக்கு நேர்மைக் கொள்கைகளைப் போதித்தவள் மண்டோதரி.