தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வந்தவர் மோகன். 1980 முதல் 90 காலகட்டங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையான நடிகராக உலா வந்தவர். நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, அந்த சில நாட்கள், விதி, நூறாவது நாள், மெளன ராகம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மெளனராகத்தின் தொடர்ச்சி அஞ்சலி:

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மெளனராகம். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் மோகன் நடிக்கவில்லை. ஆனால், மணிரத்னத்தின் முக்கியமான படமான அஞ்சலி படத்தில் முதன்முதலில் நடிக்க கதாநாயகனாக தேர்வானது மோகனே ஆகும். ஆனால், அவர் ஒப்புக்கொள்ள மறுத்த பின்னணி குறித்து கீழே விரிவாக காணலாம்.

மெளன ராகம் படத்தின் தொடர்ச்சியாகவே உருவானது அஞ்சலி திரைப்படம். இந்த படத்தில் நாயகனாக நடிக்க மறுத்தது ஏன் என்பதை, மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினியிடம் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,

உடன்பாடு இல்லை:

நான் எப்பவுமே கதை கேட்டுதான் நடிப்பேன் என்பது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு உண்மை. அந்த கதையில எனக்கு உடன்பாடு இல்லாத ஒரு விஷயம், அந்த ஸ்பெஷல் சைல்டை வேறு அறையில் படுக்க வைக்குறது. இப்போ இந்த கலாச்சாரத்திற்கு ஓகே. ஆனால், அப்போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவருக்கு அது சரியென்று தோன்றியது.

இவ்வாறு அவர் கூறினார்.

மணிரத்னம் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளியான மெளன ராகம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் மோகன் - ரேவதி - கார்த்திக் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் மோகன் - ரேவதி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஜோடி ஆகும்.

மணிரத்னம் 1990ம் ஆண்டு இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் ரகுவரன், ரேவதி ஜோடியாக நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஷாம்லி, விகே ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன், சாருஹாசன், ஜனகராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள். அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்னி நடித்திருப்பார். இந்த படத்தில் மோகனுக்கு பதிலாக நடித்த ரகுவரனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

மெல்ல திறந்தது கதவு, மெளனராகம் போன்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த மோகன் 90களின் தொடக்கத்தில் வெற்றிப் படங்கள் தர இயலாமல் தடுமாறத் தொடங்கினார். 1991ம் ஆண்டு உருவம் படத்திற்கு நடிக்காமல் ஒதுங்கியிருந்த மோகன் 1999ம் ஆண்டு அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கியிருந்தார்.

2008ம் ஆண்டு சுட்ட பழம் என்ற படம் மூலம் மீண்டும் நடித்தார். பின்னர், கடந்தாண்டு நடிகர் விஜய்யின் கோட் படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் கம்பேக் தந்தார். மேலும், ஹரா என்ற படத்திலும் அவர் கடந்தாண்டு நடித்திருந்தார். மோகன் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.