ARTICLE AD BOX
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்றும் மணிரத்னம் இயக்குவார் என்றும் செய்திகள் வெளியான நிலையில், தற்போது இருவரும் இல்லை என்றும் வேறொரு பிரபல இயக்குனரிடம் அவர் கதை கேட்டிருப்பதாகவும் கூறப்படுவது, கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் "ஜெயிலர் 2" என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் , "கூலி" மற்றும் "ஜெயிலர் 2" படங்களை முடித்துவிட்டு, ரஜினிகாந்த் மணிரத்னம் படத்தில் நடிப்பாரா? அல்லது மாரி செல்வராஜ் படத்தில் நடிப்பாரா? என்பது குறித்து தகவல்கள் வெளியாகின.
ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, வெற்றிமாறனிடம் ரஜினிகாந்த் கதை கேட்டுள்ளதாகவும், அவர் சொன்ன கதை பிடித்து விட்டதால், அந்த கதையை டெவலப் செய்யுமாறு ரஜினிகாந்த் கூறி இருப்பதாகவும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
’விடுதலை 2’ திரைப்படத்திற்கு பின்னர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ என்ற படத்தை வெற்றிமாறன் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ரஜினி படத்தை இயக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.