ARTICLE AD BOX
மும்பை: முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை அகற்றப்படும் என்ற இந்துத்துவா அமைப்புகளின் எச்சரிக்கையை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. முகலாய மன்னன் அவுரங்கசீப்பை எதிர்த்து மராத்தியர்கள் போராடினர். அப்போது சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியை கைது செய்த அவுரங்கசீப், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவுரங்கசீப்புக்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில்தான் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய சமாஜ்வாடி எம்எல்ஏ அபு அசிம் ஆஸ்மி பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என சதாரா தொகுதி பாஜ எம்பியும், சத்ரபதி சிவாஜியின் வாரிசுமான உதயன்ராஜே போஸ்லே கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பத் தொடங்கி விட்டது. விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்த தொடங்கின. நேற்றும் பல இடங்களில் போராட்டம் தீவிரம் அடைந்தது. அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.
சில இடங்களில் அவுரங்கசீப்பின் படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது மராத்தா மன்னர் சம்பாஜியை புகழ்ந்தும், அவுரங்கசீப்புக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.விஸ்வ இந்து பரிஷத் முதல்வர் பட்நவிசுக்கு விடுத்துள்ள அறிக்கையில், ‘அடிமைத்தனத்தின் அடையாளமான அவுரங்கசீப்பின் கல்லறையை அரசு இடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே பாபர் மசூதியை போன்று அதனை இடித்து தள்ளுவோம்’ என எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவுரங்கசீப் கல்லறைக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்லறையை பார்வையிட வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
The post மகாராஷ்டிராவில் திடீர் பதற்றம்; அவுரங்கசீப் கல்லறை அகற்ற கோரி போராட்டம்: போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.