ARTICLE AD BOX
நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில்கூட, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரும், குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட மணமகனும் மாரடைப்பால் உயிரிழந்தனர். அதேபோல், தெலங்கானாவில் பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 10ஆம் மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சுற்றுலா சென்றிருந்த14 வயது பள்ளி மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கன்சோலியில் உள்ள நவி மும்பை மாநகராட்சி நடத்தும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தவர் ஆயுஷ் தர்மேந்திர சிங் (14). இவர், பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி சுற்றுலாவிற்கு மற்ற மாணவர்களுடன் ராய்காட் மாவட்டம் கோபோலியில் உள்ள இமாஜிகா தீம் பார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பயணத்தின்போது, அசௌகரியமாக இருப்பதைத் தொடர்ந்து அப்படியே பெஞ்சில் அமர்ந்துள்ளார். பின்னர் திடீரென தரையில் சரிந்து விழுந்தார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன், பூங்காவிற்குள் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு மாணவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவ அதிகாரி முன்னிலையில் அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது, அதில் சிறுவன் மாரடைப்பால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக காலாப்பூர் காவல் நிலையத்தில் விபத்து மரணம் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.