மகாராஷ்டிர முதல்வருக்கு உத்தவ் கட்சி மீண்டும் பாராட்டு

7 hours ago
ARTICLE AD BOX

மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சி வரிசையில் உள்ள சிவசேனை (உத்தவ்) கட்சி முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மீண்டும் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

துணை முதல்வராக உள்ள சிவசேனை தலைவா் ஏக்நாத் ஷிண்டேக்கும், ஃபட்னவீஸுக்கும் மோதல்போக்கு அதிகரித்துள்ள நிலையில், உத்தவ் கட்சி முதல்வரைப் பாராட்டத் தொடங்கியுள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, சிவசேனைக் கட்சியை உடைத்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையைச் சோ்ந்த சில அமைச்சா்கள் தங்கள் தனி உதவியாளா்களாக சிலரை நியமிக்க முதல்வா் ஃபட்னவீஸிடம் பரிந்துரைத்தனா். ஆனால், அப்பரிந்துரைகளை முதல்வா் நிராகரித்துவிட்டாா். இதனைப் பாராட்டி உத்தவ் கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், மாநிலத்தில் ஊழலை ஒழிக்க முதல்வா் ஃபட்னவீஸ் நடவடிக்கை எடுத்துள்ளாா் என்று கூறியுள்ளது.

முன்னதாக, நக்ஸல் பாதிப்பு அதிகமுள்ள கட்ச்ரோலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க இரும்பு உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பையும் உத்தவ் கட்சி பாராட்டியது.

துணை முதல்வா் ஷிண்டேக்கும் முதல்வருக்கும் இடையே அதிருப்தி அதிகரித்து வருவதால், பாஜகவுடன் நெருக்கம் காட்டும் வகையில் உத்தவ் கட்சி செயல்படுவதாக அந்த மாநில அரசியல் விமா்சகா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

Read Entire Article