மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!

4 hours ago
ARTICLE AD BOX

ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய வி.வி.ஐப்பிக்களின் வருகையோடு ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழா அரங்கேறுகிறது! ஒரு ஆன்மீக மையம் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் என ஆகப் பெரிய அதிகார மையங்களை  இதற்கு தொடர்ந்து அழைப்பது ஏன்?

அதிகார மையங்களிடம் இருந்து விலகி நிற்றல் அல்லவா ஆன்மீகத்தின் இயல்பாக இருக்க முடியும்.

காரணம், மிக எளிமையானது! தன்னுடைய சட்ட விரோத, சமூக விரோத செயல்பாடுகள் மீது அரசு அமைப்புகள் எதுவும் நடவடிக்கை எடுக்க நினைத்து பார்க்கவே அச்சப்பட வேண்டும் என்பது தான்!

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சுமார் 400 ஏக்கர் வன நிலத்தில் நிலத்தில் – யானை வழித்தடத்தில் – ஆக்கிரமிப்பு செய்து வன & கட்டிட விதிகளை மீறி, 5 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது;

சுமார் 5,000 பேர் நிரந்தரமாக தங்குகின்ற இடமாக – பல்லாயிரம் தன்னார்வ தொண்டர்கள் தங்கள் சேவையை கட்டணமின்றி தந்து செல்லும் இடமாக – தினசரி சுமார் 5,000 முதல் 10,000 சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக ஒரு சாம்ராஜ்யம் போல எழுந்து நிற்கும் இந்த இடம் பல அராஜகங்களுக்கு மத்தியில் தான் எழுந்து நிற்கிறது. இந்த இடம் உருவாக இலட்சக்கணக்கான மரங்கள், காட்டுயிர்கள் சந்தன மரங்கள் உட்பட பழமையான, அரிதான மரங்கள், செடிகள் அழித்தொழிக்கப்பட்டன. ஆசிரமத்தை சுற்றியும், சட்டவிரோதமான மின்வேலிகள் அமைக்கப்பட்டன. யானைகள் தடம் மாறியதால், பழங்குடியினர் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. விலங்கு- மனித மோதல்கள் நடைபெற்றன. 2006-11 காலங்களில் மட்டும் 50 யானைகள் இறந்ததாகவும், 57 மனிதர்கள்!

பாஜக , ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், பார்ப்பன VIP கள், பெரு முதலாளிகள், செல்வந்தர்கள், நடிகர்கள்,  உயர்தர மற்றும் மத்திய வர்க்கத்தினர், சுற்றுலாவாசிகள், பக்தர்கள் எனப் பலரும் இந்த ஈஷா மகா சிவராத்திரியில் பங்கேற்கின்றனர்.

இப்படி அதிகார மைய வி.வி.ஐபிக்கள் வருகையில் முக்கியமான அரசு சார்பிலான செலவுகள் :-

1) டெல்லி- கோவை வந்து போன விமானப்படை தனி விமான வாடகை—–?

2) கோவை விமான நிலையம்-ஈசா மையம் சென்ற, திரும்பிய ஸ்பெஷல் ஹெலிகாப்டர் + ஸ்பேர் ஹெலிகாப்டர் இரண்டுக்கும்  வாடகை…..?

3)மேடைக்கு செல்ல கொண்டு வரப்பட்ட குண்டு துழைக்காத கார் வாடகை…?

4) ஈசா மையத்தில் வான்வெளி கண்காணிப்புக்காக போடப்பட்ட ஆளில்லா விமானங்கள் (UAV-2 & Tether Copter -1)மற்றும் ADGP + IG பொறுப்பிலான கண்ட்ரோல் ரூம் செலவுகள்…?

5) அதிகார வி.வி.ஐ.பிக்களுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு சம்பளம், படிகள், போக்குவரத்து செலவுகள்….?

6) வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணிக்காக போடப்பட்ட 6,000 காவல்துறையினர்( காவலர்கள் + அதிகாரிகள், சிறப்பு அதிரடிப் படையினர், மத்திய மாநில உளவு, நக்சல் ஒழிப்பு பிரிவினர்)  சம்பளம், போக்குவரத்து செலவுகள்……?

7) கோவை மாநகரம் – பேரூர் வரை போக்குவரத்து முறைப்படுத்த அமர்த்தப்பட்ட 1300 மாநகர காவல் துறை சம்பளம்…..

இந்த கார்ப்பரேட் திருவிழாவிற்கு இவை போன்ற செலவு எல்லாம் அரசாங்கம் சார்ந்தது!

குவியும் பணம்;

இந் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கெடுத்துக் கொண்டனர். இது புதிது அல்ல! இவர்களின் ஒரு நாள் வருகையாலும், அதிரும் ஒலி பெருக்கிகள் பாடல்களாலும், அங்கு சேரும் மனித கழிவுகளாலும் அந்த வனப் பகுதி பாழ்படுகிறது என்பது ஒருபுறமிருக்க, இது ஏதோ அந்தக் கால ராஜாங்க விழாவைப் போல நடந்தேறுகிறது, 5,000 முதல் 5 லட்சங்கள் வரை இங்கு அமர்வதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. உத்திராட்ச மாலை உள்ளிட்ட பக்தி அயிட்டங்கள்,  ஜக்கியின் காலடி போட்டோவின் விலை ரூ 3,200 ..ஆகியவற்றின் விற்பனை பல லட்சங்களை தாண்டும்.

இசை உலகின் மிகப் பிரபலங்களை இந்த நிகழ்விற்கு பாடவும்,இசைக்கவும் அழைக்கிறார்கள். அவர்கள் அதற்காக கட்டணங்கள் வசூலிப்பதில்லை. இதை ஒரு ஆன்மீகத் தொண்டாகவே செய்கிறார்கள் அவர்கள்!

பல பெரு நிறுவனங்கள் இதற்கு ஸ்பான்சர் செய்கின்றன. அதனால், இரண்டு இலட்சம் பேருக்கு மஹா அன்னதானம், பிரமாண்டமான ஒளி, ஒலி அமைப்புகள், ஒருவார கால ஆட்டம் பாட்டம், இசை- பாடல்கள், நாட்டிய, சொற்பொழிவுகள் எனப் பல செலவுகள் யாவற்றையும் பணக்கார பக்தர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஏன் இந்த மெஹா ராத்திரி என்றால், அதிகார மையங்களுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை உணர்த்தி, இலட்சக்கணக்கான பக்தர்களிடம் பார்ப்பனீய இந்துத்துவா அரசியலை நிறுவிக் கொள்வதோடு, மிகப் வருவாய் ஈட்டுவதாகும். இவை எதற்கும் முறையான கணக்கோ, வருமான வரியோ ஈஷா மையம்  கொடுப்பதில்லை.

ஜக்கி உண்மையான துறவியா?

ஜக்கியின் வார்த்தையை உண்மையென நம்பி 500-க்கும் மேலானோர் இதுவரை துறவறம் எடுத்திருப்பார்கள். வாயில் நுழையாத பெயர் மாற்றம், அவர்கள் முக்திக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினர் அனைவரின் முக்திக்கும் (முக்திக்கும் மட்டும்) உத்திரவாதம், மறுபிறவி இல்லை என்ற உறுதி எல்லாம் கொடுப்பார். அவர்களை தனது அங்கங்கள் (ஈஷாங்க) என்று வர்ணிப்பார்.  உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அனைவர்க்கும் தான் ஒரு கவசமாக இருந்து காப்பாற்றுவேன் என்றெல்லாம் நம்பவைப்பார்; அனைவருக்கும் வருடம் தவறாமல் Health insurance premium கட்டிவிடுகிறார்.

“ஆன்மீக பாதைக்கு துறவற வாழ்க்கைதான் சிறந்தது என்றும், குடும்ப வாழ்கை ஒரு சுமையோடு மலை ஏறுவது போல கடினமானது” என்றெல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவார். இதை கேட்டு, பலர் தங்கள் குடும்பங்களை (கணவன்/மனைவி) துறந்திருக்கிறார்கள். அவர்களிடம் வரும்போது மறக்காமல் அவர்கள் சொத்துக்களை பிரித்து வாங்கி வந்து விடுமாறு அறிவுறுத்துவார். கரூரில் பிரபலமான பரமேஷ் என்பவரின் குடும்ப கதையே இதற்கு சான்று.

2017 -ல் மோடி வந்த போது

எனினும், இதுவரை 150-க்கும் மேலான சாமியார்கள் ஆசிரமத்தை விட்டு  வெளியேறியுள்ளார்கள். மேலும்,குடும்ப வாழ்கையில் இருந்து கொண்டும் ஆன்மீக தொண்டு என்று இவர் கூறியதை நம்பி வந்தவர்களில் வெளியே சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தை தாண்டும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பாலமுருகன் என்னும் பஞ்சாப் cadre IAS 5 வருட காலம் ஈஷாவின் CEO வாக சம்பளம் இல்லாமல் தொண்டு புரியும் ஆவலோடு வந்தவருக்கு இரண்டு  வருடத்திலேயே பல உண்மைகள் புரிய வெளியேறிவிட்டார்.

20-25 ஆண்டு காலம் ஈசாவின் மேல் மட்டத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த பலர் வெளியேறிவிட்டார்கள். குறிப்பாக திலிப் அண்ணா என்கிற திலிப்/ AUDITOR  ராஜரத்தினம் ஈஷாவின் Managing Trustee யாக 1999-2010வரை இருந்து வந்தார். ‘விஜியின் இறப்பின் மர்மத்தில் தான் கைது செய்யப்படுவோம்’ என்று எதிர்பார்த்து ஜக்கி அவருக்கு பதிலாக இந்த பதவியில் திலிப்பை அமர்த்தினார். நிலங்கள் வாங்குவதில் ஜக்கி காட்டும்  பேராசையையும், குறுக்கு வழிகளையும் கண்டு Managing Trusteeயாக கையெழுத்திட பயந்து ஜக்கியை எதிர்க்க, அவரை அந்தப் பதவியில் இருந்து விடுவித்து விட்டார். ஈஷாவில் இருந்து விலகிய திலீப் 2014 அக்டோபர் மாதம் கோத்தகிரி மலைப்பாதையில் ஒரு  மர்மமான விபத்தில் மரணம் அடைந்தார்.

கர்மா, விழிப்புணர்வு, சம்போ, சிவசம்போ, அண்ணா, அக்கா  போன்ற வார்த்தைகளை மட்டுமே அதிகம் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும். ஜக்கி வளர்க்கும் சித்தா, மல்லி, லீலா சம்சன் போன்ற பெயர் கொண்ட  பல ஜாதி நாய்கள் முதல் மாடுகள் வரை மேய்க்கும் பொறுப்புகள் கொடுக்கப்படும். சிஷ்யர்களுக்கு என்று  கொடுக்கப்படும் சில தனிப்பட்ட பயிற்சிகள் எப்போதும் இவர்களை ஒரு அரை மயக்கத்தில்  வைத்திருக்கும்.

நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம் வேலை வாங்கப்படும். தங்கள் கர்மாவை வேகமாக கழிக்க பல மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று ஜக்கி அறிவுறுத்துவார். அதாவது ஒரு ஆள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் கழியும் கர்மாவை 18 மணி நேரம் செய்து 18 நாள் கர்மாவை ஒரே நாளில் கழிக்க முடியும் என்று பாடம் சொல்லித்தருவர்.  ஒரு ஆளுக்கு 3 ஆள் வேலை கொடுத்து விரட்டுவார். காலை 5மணி முதல் இரவு 12-1 மணி வரை வேலை. இரண்டு வேலை உணவு, தீவிர ஹட யோகா என்று உடலை பிழிந்து எடுத்து இரவு படுத்தால் பிணம் போல் கிடப்பார்கள். ஓய்வு என்று கொடுக்கும் காலத்தில் கூட மௌனத்தில் (silence) இருக்க செய்து விடுவார். இப்படியாக அவர்கள் கவனத்தை சிதற விடாமல் ஒரே திசையில் வைத்திருப்பார்.

இதுபோல சுமார் 10-20 வருடம் வேலை செய்தும் கர்மாவை முழுவதும் கழிக்க முடியாமல் பலர் வயதாகி திணறிக்கொண்டு இருக்கிறார்கள். யாராவது “எனக்கு கைவலி கால்வலி” என்று ஜக்கியிடம் சொன்னால், … “உன் கர்மா மூட்டை வெயிட் அதிகம். உனது முக்திக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் ” என்பார். இதைக்கேட்கும் மற்றவர்கள் அடுத்து அப்படி கேட்க மாட்டார்கள் இல்லையா !

சந்நியாசிகளுக்குள் பிணக்கு ஏற்படும் போது அவரிடம் முறையிடும் நபரை “நீ ஏன் அவன் கர்மாவை சுமக்கிறாய்? போச்சு போ உன் அக்கௌண்டில் புது கர்மாவும் சேர்த்துவிட்டது. கோட்டை அழி மொதல்ல இருந்து துவங்கு” என்று கூறி விடுவார்.

இங்குள்ள இளம் சிறார்களுக்கான பள்ளியில் படிக்கும், ஆண், பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுவதான குற்றசாட்டுகள் சுமார் 20 வருடங்களாகவே தொடர்ந்து வெளி வந்த போதும், இது வரை அவை குறித்து தீவிர விசாரணையோ, வழக்கு பதிவோ, குற்றப்பதிவோ அரசு தர்ப்பில் இல்லை. அவை குறித்து தற்போது பல புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஜக்கி ஒரு இண்டெலக்சுவல் ப்ராடு சாமியார்!

கட்டுரையாளர்; சந்திர மோகன்

 

Read Entire Article