ARTICLE AD BOX
Published : 27 Feb 2025 05:07 AM
Last Updated : 27 Feb 2025 05:07 AM
மகா கும்பமேளாவில் 65 கோடி பேர் புனித நீராடினர்: சிவராத்திரி விழாவுடன் நிறைவடைந்தது

பிரயாக்ராஜ் நகரில் கடந்த 45 நாட்களாக நடைபெற்ற சிவராத்திரி புனித குளியலுடன் மகா கும்பமேளா நேற்று முடிவடைந்தது. இதையடுத்து பிரயாக்ராஜ் நகரம் இயல்புநிலைக்கு திரும்புகிறது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, தினமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பல்வேறு அகாராக்களைச் சேர்ந்த துறவிகள் இதில் பங்கேற்றனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாக இது அமைந்தது. இதனால், பிரயாக்ராஜ் நகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் வாராணசி காசி விஸ்வநாதர் கோயில், அயோத்தி ராமர் கோயில் உட்பட அம்மாநிலத்தின் முக்கிய கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுவரை 65 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக மாநில் அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இந்த நாள் மகா கும்பமேளாவின் கடைசி நாள் என்பதால் கோடிக்கணக்கானோர் நேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதுமட்டுமல்லாமல் மகா கும்பமேளாவில் பங்கேற்ற நாக சாதுக்கள் மற்றும் துறவிகள், பிரயாக்ராஜ் நகரிலிருந்து டிராக்டருடன் இணைக்கப்பட்ட தேர்களில் வாராணசிக்கு ஊர்வலமாக சென்றனர்.
மகா கும்பமேளாவின் இறுதி நாளில், சிவன் வசிப்பதாக நம்பப்படும் காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றனர். அங்கு உடல் முழுவதும் திருநீறு பூசியபடி இரவு முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஜுனா அகாராவின் தலைவர் மஹந்த் பிரேம் கிரி நேற்று காலையில் கூறும்போது, “காசி விஸ்வநாதரின் முன் நாங்கள் தலைவணங்குவோம்” என்றார்.
மகாகும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சில சாதுக்கள் உள் விவகாரங்களை மேற்பார்வையிடவும் அகாரா தேர்தலுக்கு தயாராகவும் வாராணசியில் தங்கி இருப்பார்கள். மற்றவர்கள் தங்கள் ஆசிரமங்களுக்கு திரும்பிச் செல்வார்கள். வரும் 2027-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெறவுள்ள கும்பமேளாவில் இவர்கள் மீண்டும் ஒன்று கூடுவார்கள். இதற்கு அடுத்தபடியாக பிரயாக்ராஜ் நகரில் வரும் 2031-ம் ஆண்டு மகா கும்பமேளா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்மத்தின் கரையோர பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட உள்ளன. பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பிரயாக்ராஜ் நகரம் 2 மாதங்களுக்குப் பிறகு படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்ப உள்ளது.
6 சிறப்பு புனித நீராடல்: மகா கும்பமேளாவில் 65 கோடிக்கும் மேற்பட்டோர் திரி வேணி சங்கமத்தில் புனித நீராடிய தாக மாநில அரசு தெரிவித்துள் ளது. மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்ற போதிலும் 6 நாட்கள் சிறப்பு நாட்களாக அமைந்தன. முதல் நாளான ஜன.13 பவுஷ் பவுர்ணமி, 14-ம் தேதி மகர சங்கராந்தி, 29-ம் தேதி மவுனி அமாவாசை, பிப்.3 வசந்த பஞ்சமி, 12-ம் தேதி மகி பவுர்ணமி மற்றும் கடைசி நாளான 26-ம் தேதி மகா சிவராத்திரி ஆகியவை சிறப்பு நாட்களாக அமைந்தன. இந்த நாட்களில் வழக்கத்தைவிட கூடுதலான பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடினர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை