மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி

3 days ago
ARTICLE AD BOX

பெங்களூரு,

3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டு ஆடியது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பெங்களூருவின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனி வயட் ஹாட்ஜ் களம் இறங்கினர். இதில் டேனி வயட் ஹாட்ஜ் 9 ரன்னிலும், மந்தனா 26 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த எலிஸ் பெர்ரி ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ராக்வி பிஸ்ட் 1 ரன், கனிகா அகுஜா 3 ரன், ரிச்சா கோஷ் 28 ரன், ஜார்ஜியா வரேஹம் 6 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

மறுபுறம் அதிரடியாக ஆடிய எலிஸ் பெர்ரி அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 81 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் யாசிகா பாட்டியா மற்றும் ஹேய்லி மேத்யூஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் யாசிகா பாட்டியா 8 ரன்களும், அவரைத்தொடர்ந்து மேத்யூஸ் 15 ரன்களும், அதிரடியாக ரன்கள் சேர்த்த ஸ்கீவர்-புரூண்ட் 42 ரன்களும் அமெலியா கெர் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் அமன்ஜோத் கவுர் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி, சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியில் ஹர்மர்ன்பிரீத் கவுர் தனது அரை சதத்தை பதிவு செய்தநிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சஞ்சனா (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன்ஜோத் கவுர் 34 ரன்களும், கமலினி 11 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி 19.5 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜார்ஜியா வராகம் 3 விக்கெட்டுகளும், கிம் கார்த் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.


Read Entire Article