ARTICLE AD BOX
நடிகை பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் பேரில் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டது குறித்து, அவரது மனைவி கயல்விழி விளக்கம் அளித்துள்ளார். மேலும், சம்மனை கிழிக்க கூறியதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை, நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்.
அப்போது, "நேற்று (பிப் 27) எங்கள் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்ட சம்பவம், முழுவதுமாக திட்டமிட்டு நடத்தப்பட்டது. காவலாளி கைது செய்யப்பட்டதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சம்மன் கொண்டு வருகிறார்கள் என்கிற செய்தி எனக்கு வந்தது.
சீமான் ஊரில் இல்லை என எல்லோருக்கும் தெரியும். அவர் கிருஷ்ணகிரியில் தான் இருக்கிறார் என்றும் தெரியும். அவருக்கே சம்மனை அனுப்பி இருக்கலாம். இல்லையென்றால், என்னிடம் சம்மனை கொடுத்து இருக்கலாம். சம்மனை கொண்டு வந்தவர்கள் எதுவும் கூறாமல் அதனை ஒட்டிச் சென்றனர். நான் வீட்டிற்கு உள்ளே இருக்கும் போது, இவ்வாறு சம்மன் ஒட்டப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறினார்கள்.
காவல்துறையினர் சம்மனை ஒட்டிச் சென்று விட்டால், அதனை எடுத்துக் கொள்ளலாம் என வழக்கறிஞர்கள் கூறினார்கள். இந்த பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை நீண்ட நாட்களாக முன்வைக்கின்றனர். இப்போது, இந்த வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. சீமான் ஊரில் இல்லை என தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு செயல்படுகின்றனர் என்று எனக்கு தெரியும்.
வீட்டில் இருக்கும் என்னிடம் பேசிவிட்டு சம்மனை ஒட்டிச் சென்றிருக்கலாம். சம்மனில் குறிப்பிட்டுள்ள தகவல்களை படிப்பதற்காக தான் அதனை கிழித்து எடுத்து வரச் சொன்னேன். திடீரென வீட்டில் இருந்தவர்களை போலீசார் இழுத்துச் சென்றனர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்கிற மரியாதை இன்றி அவரை காவல்துறையினர் நடத்தினர்.
எங்களுக்கு பாதுகாவலராக அவர் பணிபுரிகிறார். துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசன்ஸ் அவரிடம் இருக்கிறது. சம்பவம் குறித்து போலீசாரிடம் நான் மன்னிப்பு கூறினேன். ஆனால், அவரை ரிமாண்ட் செய்வார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. இது போன்ற சூழ்நிலையை போலீசார் உருவாக்கிக் கொண்டனர். சம்மனை ஒட்டிய வளசரவாக்கம் காவல்துறையினர் முதலில் கிளம்பிச் சென்றனர்.
அதன் பின்னர், சிறிது நேரத்தில் நீலாங்கரை போலீசார் வந்து பார்வையிட வேண்டிய தேவை இருக்கிறதா? அப்படியென்றால், சம்மன் எப்போது கிழிக்கப்பட்டிருந்தாலும் போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.