ARTICLE AD BOX
மனம் உள்ளவன் மனிதன். அதனால் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஆசை என்பது பொதுவான ஒன்று. ஆசை இருக்க வேண்டியதுதான். ஆனால் அந்த ஆசை அளவோடு இருக்கவேண்டும். அவனவன் அளவிற்கும் தகுதிக்கும் தகுந்த மாதிரி இருக்கவேண்டும்.
'ஆசை அறுமின் ஆசை அறுமின்' என்றார் சுவாமி விவேகானந்தர். ஆசையை விட்டொழி என்பதின் பொருள் அடுத்தவன் பொருளின் மீது ஆசைப்படாதே. பார்க்கும் பொருள் மீதெல்லாம் பற்று வைக்காதே. மாற்றான் பொருளை அபகரிக்காதே எனும் பொருளிலேயே அப்படி எல்லாம் சொல்லப்பட்டது.
அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது அரும் பழமொழியாகும். ஒருவன் தன் வசதிக்கேற்றாற் போலவும் வருமானத்திற்கேற்ற மாதிரியும் ஆசைப்பட வேண்டும். அப்படியில்லாமல் ஆசைப்படுகிறது, முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போலாகும்.
அவனைப்போல நாமும் வாழவேண்டும் என்று வறட்டு கவுரவத்திற்கு வீண்செலவுகள் செய்து ஓட்டாண்டியானவர்கள் நிறைய உண்டு. இப்படிப்பட்ட வாழ்க்கையானது, புலியைப்போல் உடம்பில் தனக்கும் வரிப்புள்ளி வரவேண்டும் என்பதற்காக புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போலாகும். மேலும் இந்த மாதிரி மற்றவர்களுக்காக வாழ்க்கை நடத்துவது பின்னாளில் கேலிக்கூத்தாகிவிடும்.
இன்றைய பரபரப்பான உலகில் உழைத்து வாழ விரும்பாமல், சிலர் குறுக்கு வழி முயற்சிகளைச் செய்து வாழ்க்கையில் உயரவேண்டும் என்று ஆசைப் படுகின்றார்கள்.
குறுக்கு வழி என்றால் சறுக்கும் வழி என்றுதான் பொருள். சட்ட விரோதமான நடைமுறைகள், சமூக விரோதமான செயல்பாடு போன்றவைகளைத்தான் குறுக்கு வழி என்று பொதுவாக குறிப்பிடுவது வழக்கம்.
குறுக்கு வழியில் வாழ்க்கையில் உயர்வு அடைய வேண்டும் என்று விரும்புபவர்களைக் கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். இவர்களுக்கு உழைப்பில் நம்பிக்கையிருக்காது; உழைக்கத் தெரியாது; உழைக்கவும் விரும்பமாட்டார்கள்.
எப்படியாவது குறுகிய காலத்தில் பெரும் பொருளைச் சேர்த்து விட வேண்டும் என்ற பேராசை அவர்கள் மனதில் எப்போதும் கொந்தளித்துக் கொண்டிருக்கும்.
குறுக்கு வழிமூலம் வாழ்க்கையை உயர்த்திக்கொள்வது நீடித்த மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் நிச்சயம் அளிப்பதில்லை. கார் பங்களா, தோட்டம், என்று தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தால் போதும் என்று எண்ணி, குறுக்கு வழிக்காரர்கள் மேலும் தவறான வழிகளில் செல்லுகின்றனர்.
தொடக்கத்தில் ஏற்படும் வெற்றிகளும், ஆரம்பத்தில் தலைகாட்டக் கூடிய சுகபோகங்களும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு ஒரு கனவுபோல மறைந்து படுபயங்கரமான தண்டனைகளையும், தண்டனைகள் வழிபட்ட வேதனைகளையும் நிரந்தரமாக அனுபவிக்க வேண்டிய நிலைவரும் என்பதை எண்ணிப்பார்க்கவே மறந்து விடுகின்றனர்.
நாணயமாக, கண்ணியமாக வாழவேண்டும். நல்ல குணங்களை பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற பண்பாட்டு உணர்வை அந்த சிந்தனை குழிதோண்டிப் புதைத்துவிடும்.
பணவெறி பிடித்து அலையும் பேயாக மாறும் ஒரு விபரீத வழிதான் குறுக்கு வழி. குறுக்குவழி மூலம் குறுகிய காலத்தில் செல்வத்தைக் குவித்து விடுவது ஒருவேளை சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால், அதற்காக எவ்வளவோ தவறான சட்டவிரோதமான செயல் முறைகளில் இறங்கியாக வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.
நேர்வழியில் நடந்தால் உடனடியாக ஆயிரக்கணக்கிலோ லட்சக்கணக்கிலோ பொருளைக் குவிக்க முடியாமல் போகலாம். சில சமயம் வறுமையின் கோரப்பிடியில் கூட தள்ளப்படலாம். என்றாலும், இத்தகைய வாழ்க்கையின் ஊடே ஆழ்ந்த அமைதியும், ஒரு நிம்மதியும் நிலவும்.
சரியாக திட்டமிட்டுச் செயல்பட்டு உழைத்தால், எதிர்காலத்தில் நிச்சயமான வாழ்க்கை உயர்வு கிடைக்கவே செய்யும். குறுக்கு வழியில் திரட்டிய செல்வத்தை வைத்து நடத்தும் வாழ்க்கை நிம்மதியற்ற, அச்சம் நிறைந்த உண்மையான இன்பத்தைப்பெற முடியாத போலி வாழ்க்கையாகத்தான் இருக்கும்.