காளியம்மாள் கட்சியில் தொடர்வதா அல்லது மாற்றுக் கட்சிக்கு செல்வதா என்பதை முடிவெடுக்க முழு சுதந்திரம் உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி அவ்வபோது கூண்டோடு கலைந்து வருகிறது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் தவெகவிலும் திமுகவிலும் மாறி மாறி இணைந்து கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதற்கு பதிலளிக்கும் சீமான் மற்ற கட்சியில் இருந்து என் கட்சியிலும் தான் வந்து சேருகின்றனர். அதை நான் விழா எடுத்து கொண்டாடுவதில்லை என தெரிவிக்கிறார்.

வெளியேறும் கட்சி நிர்வாகிகளின் பட்டியலில் தற்போது காளியம்மாளும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகிப்பவர் காளியம்மாள். இவர் கடந்த சில நாட்களாக சீமான் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

இதனால் அவர் தவெகவில் இணைய இருப்பதாகவும் வதந்தி பரவி வந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக காளியம்மாள் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக நாம் தமிழர் கட்சி பொறுப்பை குறிப்பிடாமல் அழைப்பிதழ்களில் தனது பெயரை குறிப்பிடுமாறு காளியம்மாள் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அழைப்பிதழில் வெறும் சமூக செயற்பாட்டாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காளியம்மாள் தரப்பிடம் கேட்டபோது கட்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி என்பதால் கட்சி பெயரை குறிப்பிடவில்லை என சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “கட்சியில் தொடர்வதா அல்லது மாற்றுக் கட்சிக்கு செல்வதா என்பதை முடிவெடுக்க காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. பருவ காலத்தில் இலையுதிர் காலம் என உண்டு. அதேபோல தற்பொழுது நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் சென்று கொண்டு இருக்கின்றனர். நீங்கள் பேட்டி எடுத்து போடுவதால் கடிதத்தை எடுத்துச் சென்று எழுதி வைத்துவிட்டு செல்கின்றனர்.

கட்சிக்கு வரும்போது வாங்க வாங்க வணக்கம் என்று சொல்லுவோம். கட்சியை விட்டு போகும்போது போங்க போங்க நன்றி என்று சொல்லுவோம்” எனத் தெரிவித்தார்.