ARTICLE AD BOX
போனஸ் பங்கு அறிவிப்பு எதிரொலி.. தொடர்ந்து 2வது நாளாக 5 சதவீதம் உயர்ந்த பிரதின் பங்கு..
பிரதின் லிமிடெட் இரும்ப மற்றும் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பிரதின் லிமிடெட் ரூ.20க்கும் குறைவான ஒரு ஸ்மால்கேப் பங்காகும். இந்நிறுவனத்தின் கடந்த காலாண்டுகளின் நிதி நிலை முடிவுகளை பார்க்கும்போது அது முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இல்லை. இந்நிறுவனம் கடந்த திங்கட்கிழமையன்று, தனது பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் பங்கு வழங்குவதற்கான பதிவு தேதியை மார்ச் 7ம் தேதி என நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்தது. இதனையடுத்து இந்த பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் போட்டி போட்டனர். இதன் எதிரொலியாக நேற்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை 4.94 சதவீதம் அதிகரித்து ரூ.16.99ஆக இருந்தது.
இன்றும் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.94 சதவீதம் உயர்ந்து ரூ.17.83ஆக இருந்தது. பங்குச் சந்தை தரவுகளின்படி, பிரதின் நிறுவனம் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கை, தலா ரூ.1 முகமதிப்புள்ள 10 ஈக்விட்டி பங்குகளாக பிரிக்க உள்ளது. மேலும், பங்குதாரர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்கும் ஒவ்வொரு ஈக்விட்டி பங்கிற்கும் இரண்டு பங்குகள் போனஸாக வழங்குவதாக அறிவித்தது.

மேலும், பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் பங்குகள் பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்காக, மார்ச் 7ம் தேதியை பதிவு தேதியாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2000ம் ஆண்டுகளில் தொடக்கத்தில் இந்நிறுவனம் பட்டியலிடப்பட்டது முதல் இதுவரையிலான காலத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு வெறும் 4.94 சதவீதம் மட்டுமே வருமானம் கொடுத்துள்ளது. அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 63 சதவீதம் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆகஸ்ட் 29ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.53.27ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. 2025 பிப்ரவரி 20ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.15.43க்கு சென்றது. தற்போது இப்பங்கு அதன் 52 வார உச்சவிலையை காட்டிலும் 66 சதவீதம் குறைவாக வர்த்தகமாகி வருகிறது. இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.60.31 கோடியாக இருந்தது.