ARTICLE AD BOX
மதுரா,
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மகோரா போலீஸ் நிலையத்தில் பணயமர்த்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மோகித் ராணா என்பவர். அதே போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று இரவில் இருவரும் பணியில் இருந்துள்ளனர். அப்போது போதையில் இருந்த மோகித் ராணா, பெண் சப்-இன்ஸ்பெக்டரின் அறையில் நுழைந்து, அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அதற்கு முன்பு தன்னிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை பார்க்க கட்டாயப்படுத்தியதாகவும் கூறி உள்ளார்.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். விசாரணை நடக்க இருப்பதை அறிந்த மோகித் ராணா தனது போனில் இருந்த ஆபாச வீடியோக்களை அழித்துள்ளார். தனது போன் மற்றும் ஸ்மார்ட்வாட்சை வெளியே வீசியெறிந்துவிட்டார். இதையடுத்து மோகித் ராணா கைது செய்யப்பட்டார். அவரது செல்போனை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், பெண்ணின் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராணா கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை கோர்ட்டு காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.