ARTICLE AD BOX
போடி: போடி அருகே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள மீனாட்சி அம்மன் கண்மாயை சீரமைப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சி எல்லைப்பகுதியில் அம்மாபட்டி ஊராட்சியில் மீனாட்சியம்மன் கண்மாய் சுமார் 200 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ளது. தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய்களில் இதுவும் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சிற்றோடைகள், குரங்கணி கொட்டகுடி ஆற்றில் வரும் தண்ணீர் மூக்கறைப்பிள்ளையார் தடுப்பணையில் சேகரமாகிறது. இந்த தடுப்பணை நிரம்பும் போது அங்குள்ள மதகின் வாயிலாக வெளியேறும் தண்ணீர் ரெட்டை வாய்க்கால் வழியாக கடக்கிறது. இதன் வாயிலாக போடி சாலைக்காளியம்மன் கோயில் அருகில் உள்ள பங்காருநாயக்கர்சாமி கண்மாய், மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியிலுள்ள சங்கரப்ப நாயக்கன் கண்மாய் ஆகியவை நிறைந்து, அடுத்தபடியாக அதே கால்வாயில் செல்லும் தண்ணீர் மீனாட்சியம்மன் கண்மாயை சென்றடைகிறது.
இந்தக் கண்மாயில் தேங்கும் தண்ணீரைப் பயன்படுத்தி சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த தண்ணீர் ஒரு போக நெல் சாகுபடிக்கு நேரடி பாசனத்திற்கும், தென்னை, வாழை, மக்காச்சோளம், வெள்ளை சோளம், கேழ்வரகு, துவரை, உளுந்து, காய்கறிகள், ஆலை கரும்பு சாகுபடிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கண்மாய் அம்மாபட்டி கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், பின்பு தமிழக பொதுப்பணி துறைக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்தக் கண்மாயில் மீன் வளர்ப்புக்கும் குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் உள்ளது. இந்தக் கண்மாயின் பெரும்பாலான பகுதியில் ஆகாயதாமரைகள், முட்செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீர் முழுமையாக தேங்காமலேயே வெளியேறும் நிலை உள்ளது.
எனவே இந்தக் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, முழுமையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெரிய கண்மாயாக இருப்பதால் படகு சவாரிக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் அதிக பரப்பு கொண்ட மீனாட்சியம்மன் கண்மாய் பல ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இக்கண்மாயில் இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு மண் மேடாக காட்சியளிக்கிறது. இதனை முறையாக தூர்வாரி முழு கொள்ளளவு தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பிரபாகரன் கூறுகையில், கண்மாயை முழுமையாக தூர்வாரி பராமரித்து, படகு சவாரிக்கான கட்டமைப்புகளை உருவாக்கினால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். சுற்றுவட்டார பாசன நிலங்களும் பயனடையும் என்றார்.
The post போடி அருகே மீனாட்சி அம்மன் கண்மாய் சீரமைக்கப்படுமா?… விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.