ARTICLE AD BOX
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த முருகையா மகன் சுஜீவன்(எ) சந்தோஷ் (வயது 26), எட்டயபுரம் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு சாலையில் நின்று கொண்டிருந்த 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்யும் எண்ணத்தோடு கடத்த முயன்றபோது கையும் களவுமாக பிடிப்பட்டார்.
இதையடுத்து அந்த வாலிபரை எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் குழந்தை கடத்தல் சட்டபிரிவு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று முன்தினம் (18.03.2025) தீர்ப்பு அளித்தார். அதில் அவர், குற்றவாளியான சுஜிவன்(எ) சந்தோஷ்க்கு குழந்தை கடத்தல் குற்றத்திற்கு 3 ஆண்டுகளும், போக்சோ குற்றத்திற்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து அதை மொத்தம் 5 ஆண்டுகளில் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதோடு, ரூ.7,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கை சிறப்பாக விசாரணை செய்த அப்போதைய எட்டயபுரம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் இளவரசு, அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு சங்கரகோமதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.