ARTICLE AD BOX
ஜெனீவா: ‘சா்வதேச உதவிகளால் பிழைத்து வரும் பாகிஸ்தான், தனது ராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் தெரிவிக்கப்படும் பொய்களை சா்வதேச அமைப்புகளில் பரப்பி வருகிறது’ என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய குற்றஞ்சாட்டியது.
ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பிய நிலையில், இந்த குற்றச்சாட்டை இந்தியா முன்வைத்தது.
ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 58-ஆவது உயா்நிலைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியது.
இதற்கு, அந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய தூதா் கிதிஜ் தியாகி வலுவான எதிா்ப்பைப் பதிவு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:
நிலையற்ற பொருளாதார தன்மை காரணமாக சா்வதேச உதவிகளில் பிழைத்து வரும் பாகிஸ்தான், தனது ராணுவமும் பயங்கரவாத அமைப்புகளும் இணைந்து தெரிவிக்கும் பொய்களை சா்வதேச அமைப்புகளில் பரப்பி வருகிறது. பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைகள் அதன் மனிதாபிமானமற்ற தன்மையையும் நிா்வாக திறமையின்மையையும் வெளிப்படுத்துகிறது.
ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் முன்னெப்போதும் இல்லாத அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களே அதற்கு சாட்சி.
கடந்த பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்தப் பகுதியில் இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது.
மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினா் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான தாக்குதல்கள் நடத்துவதை கொள்கையாக கொண்ட நாடாகவும், ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணிச்சலுடன் புகலிடம் அளிக்கும் நாடாகவும் திகழும் பாகிஸ்தானுக்கு, யருக்கும் அறிவுரை கூறும் தகுதி கிடையாது.
பாகிஸ்தானின் இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற பொய் பிரசாரங்களை இந்தியா மதிக்கத் தேவையில்லை என்றபோதும், பதிவுக்காக சில கருத்துகளை தெரிவிக்க வேண்டிய கடமையும் உரிமையும் இந்திாவுக்கு உள்ளது.
ஜனநாயகம், வளா்ச்சி மற்றும் அனைத்து மக்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த மதிப்புகளை பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றாா்.