ARTICLE AD BOX
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறும். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வு இயக்ககம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளை சேர்த்து மொத்தமாக 25,57,354 பேர் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர். 11-ம் வகுப்பு தேர்வை 3,89,423 மாணவர்கள், 4,28,946 மாணவிகள், 4,755 தனித்தேர்வர்கள், 137 கைதிகள் என மொத்தம் 8,23,261 பேர் எழுதவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வை 4,46,411 மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள், 272 கைதிகள் என 9,13,036 பேர் எழுதுகின்றனர்.
11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு 3,316 மையங்களும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இவை தவிர, தேர்வு கண்காணிப்பு சிறப்பு படைகள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் விவரங்களையும் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பொதுத் தேர்வின்போது முறைகேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தேர்வுத் துறை எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. பொதுத் தேர்வில் ஒழுங்கீன செயல்கள் என 15 வகையான குற்றங்கள் முன்வைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பிட் அல்லது அச்சடித்த குறிப்புகளை மாணவர்கள் வைத்திருப்பின், அவர்கள் அன்றைய பாடத்திற்கான தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் தேர்வு எழுத ஓர் ஆண்டு தடை விதிக்கப்படும்.
காப்பி அடிப்பது, துண்டு சீட்டு அல்லது புத்தகம் ஆகியவை கொண்டு எழுதுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் குற்றத்தின் தன்மை அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மற்ற மாணவர்களின் விடைத்தாள்களை பார்த்து எழுதுவது, விடைத்தாள்களை மாற்றிக்கொள்ளுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டால், தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், குற்றத்தன்மையின் அடிப்படையில் ஓர் ஆண்டு அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், நிரந்தரமாக பொதுத் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
குறிப்பாக, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தேர்வு அறையிலேயோ அல்லது வெளியிலேயோ தேர்வர்கள் தவறாக நடந்து கொண்டால் அல்லது தகாத வார்த்தைகளால் உபயோகித்தாலோ, தாக்கினாலோ, பிற பாடங்களுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படுவதோடு, நிரந்தர தடை விதிக்கவும் கூடும்.
இவையில்லாமல், பொதுத் தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டால், சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கபப்டும்.