ARTICLE AD BOX
முன்னர் இருந்த காலத்தில் வயோதிகத்தை பிரதிபலிக்கும் விதமாக முடி உதிர்வு காணப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் நிறைய இளைஞர்கள் முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 20 வயது முதலே நிறைய பேருக்கு முடி உதிர்வு இருக்கிறது.
முடி உதிர்வுக்கு ஏராளமான காரணங்கள் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, தூக்கமின்மை, மன அழுத்தம், உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மாசுபாடு என பல்வேறு காரணங்களை வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.
எனினும், பெரும்பாலானவர்களின் முடி உதிர்வு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக பொடுகு தொல்லை இருக்கிறது. உடலில் ஏற்படும் அதிக உஷ்ணத்தின் காரணமாக வறட்சித் தன்மை ஏற்படுகிறது. இந்த வறட்சியினால் பொடுகு உருவாகிறது.
பொடுகு தொல்லையை நீக்க எத்தனையோ ஷாம்புக்கள் மற்றும் சீரம்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. எனினும், இவற்றில் இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், அவை வேறு ஏதேனும் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற தயக்கம் மக்களிடையே நிலவுகிறது.
அந்த வகையில் பொடுகு மற்றும் சருமம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு நீரடி முத்து விதைகளை மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிமுறையையும் அவர் விளக்கியுள்ளார்.
அதன்படி, இந்த நீரடி முத்து விதைகளை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து ஒரு நாள் இரவு முழுவதும் மோரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், காலையில் இத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து பசை பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகு தொல்லையை போக்குவதற்கான மருந்து தயாராகி விடும். இதனை, தலையில் தேய்த்து விட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளித்து விடலாம். இப்படி செய்தால் பொடுகு தொல்லை நீங்கும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.