பேருந்துக்கு காத்திருந்த பள்ளி ஆசிரியை காரில் கடத்தி பாலியல் தொல்லை: ஒருவர் கைது

3 days ago
ARTICLE AD BOX

திருநெல்வேலி: நெல்லை அடுத்த தச்சநல்லூர் அருகே பேருந்துக்காக காத்திருந்த தனியார் பள்ளி ஆசிரியை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட செல்போன் கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளத்தை அடுத்த ரெட்டியார்பட்டியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார்.

அப்போது அந்த பகுதியில் நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கட்டாரங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜு(34) செல்போன் கடை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், நாள்தோறும் வேலைக்கு சென்று வரும்போது இளம்பெண்ணுக்கும், ராஜுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இதனிடையே இளம்பெண் நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார். இதனால் ராஜுவுக்கு அந்த பெண்ணை பார்க்க முடியாமல் போய்விட்டது. இதனால் மன வேதனையில் ராஜூ இருந்துள்ளார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அந்த இளம்பெண் வேலையை முடித்துவிட்டு, ஊருக்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு காரில் ராஜு வந்துள்ளார். அப்போது பேசிக்கொண்டே ஊருக்கு போகலாம். ஊரில் கொண்டு விடுகிறேன் என்று அந்த பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் இளம்பெண் அச்சம் அடைந்து காரில் ஏற மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜு, அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்திக் கொண்டு குமரி நோக்கி அழைத்து சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுக்க ராஜு திட்டமிட்ட நிலையில், அதனை அறிந்து கொண்ட இளம்பெண் பாளை டக்கம்மாள்புரம் அருகே வந்தபோது காரில் இருந்து இறங்கிவிட்டார்.

'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

பின்னர் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக போலீசுக்கு போன் செய்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகர போலீசார், ராஜுவை பிடித்து தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், காரில் வைத்தே இளம்பெண்ணை ராஜூ பாலியல் ரீதியில் சீண்டல்கள் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பெண்ணை கடத்த முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜுவை கைது செய்தனர்.

ஆசிரியையை ஒருதலைபட்சமாக ராஜு காதலித்து வந்ததாகவும் அதற்கு மறுத்ததால் காரில் கடத்தியதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளிக்கு சென்றுவிட்டு பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை காரில் கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article