ARTICLE AD BOX
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 19-ம்தேதி தொடங்கி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்த நிலையில் துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான இந்தியா, நடப்பு சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தானை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் விராட் கோலியும், ஸ்ரேயஸ் அய்யரும் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானின் நம்பிக்கையை சிதைத்தது மட்டுமில்லாமல் நேர்த்தியாக ஆடி பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர். கோலி - ஸ்ரேயஸ் கூட்டணி 114 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த போட்டியில் கோலி 100 ரன்களுடனும் (111 பந்து, 7 பவுண்டரி), ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். சிறப்பாக விளையாடியதற்காக விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவை என்னவென்று பார்க்கலாம்.
* பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி 2 கேட்ச் பிடித்தார். அத்துடன் அவரது கேட்ச் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்தது. ஒரு பீல்டராக அதிக கேட்ச் பிடித்த இந்தியர் என்ற சாதனையை முகமது அசாருதீனிடம் (156 கேட்ச்) இருந்து தட்டிப்பறித்தார். ஒட்டுமொத்தத்தில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர்களில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே (218 கேட்ச்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (160) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார்.
* சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதற்கு முன்பு ரோகித் சர்மா 91 ரன்கள் (2017-ம் ஆண்டு) எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
* பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். மேலும் இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
* ஐ.சி.சி. தொடர்களில் (50 ஓவர் மற்றும் 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை) பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் விராட் கோலி இதுவரை 5 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். ஐ.சி.சி. போட்டிகளில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக வேறு யாரும் 3 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருதை பெற்றதில்லை.