ARTICLE AD BOX
பெரும் நிதி சிக்கலில் ஹாங்காங்.. 10,000 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு..
ஹாங்காங் அரசு சிக்கன நடவடிக்கையாக 10,000 அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணங்களால் ஹாங்காங் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருக்கிறது.
நிதி பற்றாக்குறை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் சில சிக்கன நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக ஹாங்காங் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 10000 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஹாங்காங்கின் நிதி செயலாளர் பால் சான் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தற்போது ஹாங்காங் நிதிநிலை மோசமாக இருக்கிறது அதனை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் இலக்கு எனக் கூறியுள்ள அவர் இதற்காக சில சிக்கன நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டி இருக்கிறது எனக் கூறியுள்ளார். 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 10,000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூறியுள்ள அவர் இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களில் 2 சதவீதம் பேர் குறைவார்கள் என தெரிவித்துள்ளார்.
2028 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் அரசு தன்னுடைய செலவினத்தை ஏழு சதவீதம் வரை குறைக்க திட்டமிட்டு இருப்பதாக நிதி செயலாளர் பால் சான் குறிப்பிட்டுள்ளார். ஹாங்காங்கின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் ஹாங்காங்கில் நிலங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் பெருமளவில் குறைந்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் 87.8 பில்லியன் ஹாங்காங் டாலர்கள் அளவுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறியுள்ளார்.
அதேவேளையில் ஹாங்காங்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக கவனம் செலுத்த போவதாக அறிவித்துள்ளார். இதற்காக ஒரு பில்லியன் ஹாங்காங் டாலர்களை ஒதுக்கீடு செய்து செயற்கை நுண்ணறிவு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை அமைக்க இருப்பதாக கூறியுள்ளார் . நிதித்துறை செயலாளரின் இந்த பட்ஜெட் அறிவிப்பினை தொடர்ந்து ஹாங்காங் பங்குச்சந்தை குறியீடு 3% வரை உயர்ந்தது.
சீன பொருளாதாரம் மந்தமடைந்தது, அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவக்கூடிய மோதல்கள் ஆகியவை ஹாங்காங்கை பெருமளவில் பாதித்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் ஹாங்காங்கின் பொருளாதாரம் வளர்ச்சி 3.2% என இருந்தது. இந்த ஆண்டு அது 2% என்றே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் அரசுக்கு காலம் காலமாகவே நிலம் விற்பனை மூலம் தான் பெருமளவில் வருமானம் கிடைத்தது. அரசுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தில் 20% நிலம் விற்பனையில் இருந்து தான் கிடைத்து வந்தது ஆனால் தற்போது அது வெறும் 5% என குறைந்துவிட்டது. இதுவே அந்த நாடு தற்போது பெரிய நிதி சிக்கலில் இருப்பதற்கு காரணமாக உள்ளது.Story written by: Devika