ARTICLE AD BOX
பெரியாரை திட்டினால் செருப்பால் அடிக்க வேண்டும் என தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
கும்பகோணத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில், "எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது. தி.மு.க-வை கூட திட்டலாம். ஆனால், பெரியாரை திட்டியவன் யாராக இருந்தாலும் செருப்பால் அடிக்காமல் விடக் கூடாது. அது தான் மானமுள்ள தமிழனுக்கு அடையாளம். பெரியார் இந்த நாட்டில் தோன்றாவிட்டால், நாங்கள் பிச்சைக்காரர்களாக இருந்திருப்போம்.
பெரியார், முதலமைச்சர் உள்ளிட்ட அரசு பதவிகளில் அங்கம் வகிக்க வேண்டும் என ஆசைப்படவில்லை. நேற்று காலை கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இந்த சமூதாயத்திற்கு தலைவராக இருந்த பெரியார், ஒரு கவுன்சிலராக கூட ஆசைப்படவில்லை.
இப்படிப்பட்ட பெரியாரை திட்டுபவர்களை சும்மா விடுவதா? பெரியாரை திட்டும் போது தான், அவரது கருத்துகளை பலரும் எடுத்துக் கூற தொடங்குவார்கள். இதனை சொல்லும் போது தான் பெரியார் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வார்கள்.
இளைஞர்களை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் உதித்து விட்டார் என்ற மகத்தான வரலாறு நமக்கு உள்ளது. சனாதானம் குறித்து உதயநிதி பேசியதால், இந்தியா முழுவதும் ஏறத்தாழ 1,300 வழக்குகள் உதயநிதி மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்கள் 4 வர்ணங்களாக பிரிக்கப்பட்டதை கூறிய சனாதானம் வேண்டாம் என உதயநிதி தெரிவித்தார். இதற்காக உதயநிதி ஸ்டாலினை அழிக்க நினைத்து வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலின் பின்வாங்கவில்லை.
திராவிட இயக்க சிந்தனைகளை எடுத்துரைக்கும் விதமாக வகுப்புகள், பயிற்சி பாசறைகள் நடத்தப்பட வேண்டும். இவற்றை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.