பெரியபாளையம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி பணியை விரைவில் முடிக்க வலியுறுத்தல்

4 days ago
ARTICLE AD BOX

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அடங்கிய பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இதில் இந்திரா நகர், பவானி நகர் மற்றும் அம்பேத்கரில் மட்டும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அம்பேத்கர் நகர் உள்பட சுற்றுவட்டார நகர் பகுதிகளில் மக்கள்தொகை அதிகரிப்பினால், இங்கு புதிதாக கூடுதல் கொள்ளளவிலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித் தரவேண்டும் என்று பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த வருடம் அம்பேத்கர் நகரில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் துவங்கின.
இதற்காக அங்கு சிமென்ட் கான்கிரீட்டிலான தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன. அதன்பிறகு தொட்டி கட்டும் பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இதனால் அப்பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பதிலாக, புதிதாக கட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் தூண்கள் கடந்த சில மாதங்களாக கிராம மக்களிடையே பரிதாபமாக காட்சியளித்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி, ஒன்றிய மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், முறையான பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

எனவே, பெரியபாளையம் ஊராட்சியில் அதிகரித்து வரும் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு, இங்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகளை தரமான முறையில் முடித்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பெரியபாளையம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி பணியை விரைவில் முடிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article