ARTICLE AD BOX
பெரம்பலூர்: சென்னையில் இருந்து நேற்றிரவு ஆம்னி பஸ் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் நோக்கி புறப்பட்டது. இதில் 23 பயணிகள் பயணித்தனர். அய்வர் ராஜா(30) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக மகேஷ்(35), கண்டக்டராக பாலசுப்பிரமணியன்(20) இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா சின்னாறு அருகே நள்ளிரவு 12.30 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது பஸ்சின் பின்புறத்தில் இடது பக்கம் உள்ள டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவர் அய்வர் ராஜா சுதாரித்துக்கொண்டு, பஸ்சை சாலை ஓரம் நிறுத்தி உடனே கீழே இறங்கும்படி பயணிகளை கேட்டுக்கொண்டார். தூக்கத்தில் இருந்து எழுந்த பயணிகள் வேக வேகமாக கீழே இறங்கினர்.
இதனிடையே டயர் வெடித்ததில் ஏற்பட்ட உராய்வில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post பெரம்பலூரில் நள்ளிரவில் சென்னை பஸ் தீயில் எரிந்து நாசம்: பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.