ARTICLE AD BOX
கரூர்,
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று பாலின சமத்துவம், சமவாய்ப்பு மற்றும் பெண்கள் அதிகாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜோதிராமன் பேசியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூட பாலினத்தின்பால் பாகுபாடு இருக்க கூடாது என்று வலியுறுத்திய பின்பும், ஏன் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேவைப்படுகிறது என்று சிந்திக்க வேண்டும். ஒரு குழந்தை பெண் குழந்தையாக பிறக்கின்ற போது அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் அதை எவ்வாறு வரவேற்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற நிலையில் இருந்து ஆரம்பிக்கிறது.
ஒருசில இல்லங்களில் ஆண் குழந்தை பிறந்தால் கொண்டாடுவதும், பெண் குழந்தைகள் பிறந்தால் அதை வேறுமாதிரியாக பார்க்கின்ற எண்ணம் அங்கேயே ஆரம்பித்து விடுகிறது. இதைதான் நாம் முதலில் களைய வேண்டும். பெண்களுக்கு சட்டத்தின் வழியாக உரிமைகளும், பாதுகாப்பும் வழங்கப்பட்டு இருந்தாலும், அதை நிறைவேற்றும் கடமையும், பொறுப்பும் வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
பெண் பிள்ளைகளை, ஆண் பிள்ளைகளுக்கு சமமாக பார்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு என்ன உரிமைகள், சலுகைகள் வழங்குகிறமோ, அதே அளவிற்கு பெண் பிள்ளைகளுக்கும் சமமாக ஆரம்பத்தில் இருந்தே அதை வழிநடத்த முன்மாதிரியாக இருக்க வேண்டும். அந்த ஆரம்ப நிலையிலேயே ஆண் பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு சமமானவர்கள். எந்தவிதத்திலும் உங்களை விட தாழ்ந்தவர்கள் இல்லை என்ற கருத்தை மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.