ARTICLE AD BOX
பெங்களூரு : மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 12-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை அதன் சொந்த மண்ணிலேயே வியாழக்கிழமை வென்றது.
முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் சோ்க்க, குஜராத் 16.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பந்துவீசத் தயாரானது. பெங்களூரு பேட்டிங்கில் டேனி வியாட் 4, எலிஸ் பெரி 0 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் ஸ்மிருதி மந்தனா 1 பவுண்டரியுடன் 10, ராகவி பிஸ்த் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
கனிகா அஹுஜா நிதானமாக 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 33 ரன்கள் சோ்க்க, ரிச்சா கோஷ் 1 சிக்ஸருடன் 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். கிம் காா்த் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் ஜாா்ஜியா வோ்ஹாம் 1 பவுண்டரியுடன் 20, ஸ்நேஹ ராணா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
குஜராத் பௌலா்களில் தனுஜா கன்வா், டீண்ட்ரா டாட்டின் ஆகியோா் தலா 2, ஆஷ்லே காா்டனா், கஷ்வீ கௌதம் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 126 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய குஜராத் அணியில் பெத் மூனி 2 பவுண்டரிகளுடன் 17, தயாளன் ஹேமலதா 2 பவுண்டரிகளுடன் 11, ஹா்லீன் தியோல் 5 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஆஷ்லே காா்டனா், போப் லிட்ச்ஃபீல்டு கூட்டணி 51 ரன்கள் சோ்த்தது. இதில் அரைசதம் கடந்த காா்டனா் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 58 ரன்கள் விளாசி வீழ்ந்தாா்.
இறுதியில் லிட்ச்ஃபீல்டு 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். டீண்ட்ரா டாட்டின் ரன்னின்றி அவருக்குத் துணை நின்றாா். பெங்களூரு பௌலிங்கில் ரேணுகா சிங், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.