ARTICLE AD BOX
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், மொழிகள்வாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, அவ்வப்போது மொழிப் பிரச்னைகள் ஏற்படுவதுடன் அம்மாநிலங்களில் வசிப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணமாக கர்நாடகா விளங்குகிறது. அது, அவ்வப்போது மொழிப் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறது. அந்த வகையில் தற்போது, பெங்களூரு வித்யாரண்யபுராவில் உள்ள ஓர் உள்ளூர் உணவகத்தின் அறிவிப்புப் பலகை ஒன்று மீண்டும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. அந்த டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில், ’இந்தி அதிகாரப்பூர்வ மொழி’ என்று எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து அதற்கு எதிராகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். பயனர் ஒருவர், “மொழிப் பிரச்னை காரணமாக பெங்களூரு, வெளியாட்களுக்கு மிகவும் விரும்பத்தகாததாக மாறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர், “இது ஆத்திரமூட்டும் செயல். நிலத்தையும் அதன் கலாசாரத்தையும் மதிக்கவும். ஆனால் மக்கள் அவசரப்பட்டு ஒரு தொழிலை அவமானப்படுத்துவதற்கு முன், அது உரிமையாளரால் செய்யப்பட்டதா அல்லது பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்பதைக் கண்டறியவும்" எனப் பதிவிட்டுள்ளார். மூன்றாவது பயனர், “அங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறீர்களா? அப்படியானால், இந்த மொழிப் பிரச்னைகளால் கொதிநிலையில் இருக்கும் நகரத்தில் அப்பட்டமாக பதற்றங்களை உருவாக்குவதற்காக அதை மூட வேண்டும்" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் பெங்களூருவில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வித்யாரண்யபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த காவல்துறை, ”அந்தப் பலகை பாபு என்ற நபரால் வைக்கப்பட்டது என்றும், கட்டடத்தின் உரிமையாளருக்கு அது தெரியாது” என்றும் உறுதிப்படுத்தினர். தற்போது அந்தப் பலகை அகற்றப்பட்டு, நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் உறுதியளித்தனர். ஏற்கெனவே, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.