பெங்களூரு: பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் பெருமளவில் காணப்படுகிறது. குறிப்பாக ஐடி துறையில் கோடிங், புரோகிராமிங் உள்ளிட்ட சில வேலைகளை ஏஐ தொழில்நுட்பங்களே மேற்கொண்டுவிடுகின்றன. இதனால் பல நிறுவனங்களும் ஐடி சார்ந்த பணிகளை ஏஐ முறையில் தானியங்கியாக மாற்றிவிட்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.
ஏஐ காரணமாக பெங்களூருவில் ஐடி துறையில் கடந்த ஆண்டு 50000 பேர் பணியை இழந்திருப்பதாக ascendas என்ற தளம் வெளியிட்ட செய்தி குறிப்பிடுகிறது. இந்தியாவின் ஐடி தலைநகரமாக பெங்களூரு செயல்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான ஐடி நிபுணர்கள் இங்கே தங்கி வேலை செய்கின்றனர் , நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் ஐடி துறையில் வேலை தேடி பெங்களூருக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஐடி துறை சார்ந்த ஊழியர்களுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெங்களூருவில் செயல்பட்டு வரக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய குறிப்பிட்ட சில பணிகளை மனிதர்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ள தொடங்கிவிட்டன.
இதன் காரணமாக குறைந்த செலவில் ஐடி பணிகளை நிறுவனங்களால் மேற்கொள்ள முடிகிறது. இதனால் நுழைவு நிலையில் இருக்கக்கூடிய ஊழியர்கள் பலரும் பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
பெங்களூருவில் ஐடி துறையில் ஏற்படக்கூடிய எந்த ஒரு தாக்கமும் ஒட்டுமொத்த பெங்களூருவின் பொருளாதாரத்தையே பாதிக்கும். ஏனெனில் பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை சுற்றி பல்வேறு தொழில்கள் நடைபெறுகின்றன.
வெளியூர்களில் இருந்து வந்து பெரும்பாலானவர்கள் தங்கி வேலை செய்வதால் அவர்களுக்கான ஹாஸ்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன. ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறையும் போது அது சார்ந்த இயங்கக்கூடிய பல்வேறு தொழில்களும் பாதிக்கப்படும்.
ஹாஸ்டல்கள் மற்றும் உணவகங்கள் நடத்துவோர் பாதிக்கப்படுவார்கள். அவுட்டர் ரிங் சாலையில் பெருமளவிலான தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ளன. எனவே இந்த பகுதியில் பலரும் ரியல் எஸ்டேட் முதலீடு செய்தனர். ஆனால் ஐடி துறை வீழ்ச்சி அடையும்போது இந்தப் பகுதிகளில் வீடுகளின் மதிப்பும் வாடகை மதிப்பும் குறையும். இது வீட்டு உரிமையாளர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் போது.
எனவே ஐடி துறையில் மந்த நிலையும் , ஊழியர்கள் பணிநீக்கமும் தொடர்ந்தால் பெங்களூருவில் 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாடகை வருமானம் பாதிக்கும், மேலும் ரியல் எஸ்டேட் மதிப்பு 15 முதல் 20% வரை குறையலாம் என சொல்லப்படுகிறது.