ARTICLE AD BOX
பொதுவாக பூரண் போலி விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளில் செய்யப்படும் ஒரு ரெசிபியாகும். இதற்கு மைதா மற்றும் உள்ளே வைக்கும் பூரணம் தேவை. பூரணத்தில் கடலை பருப்பு, தேங்காய், ஏலக்காய் மற்றும் வெல்லம் வைக்கப்படும். இது பாராத்தாபோல் செய்யப்படும் ஒரு ரெசிபியாகும். இதை செய்ய நேரமும் குறைவாகத்தான் தேவைப்படும். இதற்கு இறுதியில் நெய் சேர்த்தால் சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சுடச்சுட சூப்பரான போலியை நீங்கள் அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது பாலில் நனைத்தும் சாப்பிடலாம்.
தேவையனான பொருட்கள்
• மைதா – அரை கிலோ
• உப்பு – சிறிதளவு
• எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
• வெல்லம் – கால் கிலோ
• ஏலக்காய் – 2
• தேங்காய்த் துருவல் – அரை கப்
• கடலை பருப்பு – கால் கிலோ
• எண்ணெய் – தேவையான அளவு
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
1. மைதா மாவை சலித்து அதில் சிறிது உப்பு சேர்த்து தேவைப்பட்டால் பேக்கிங் சோடா சேர்த்து எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளவேண்டும். மாவை நல்ல சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவேண்டும். இதை ஒரு மிருதுவான துணியைப் போட்டு மூடிவைக்கவேண்டும்.
2. கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, சிறிய குக்கரில் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் ஆறியவுடன் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதில் வெல்லம் பொடித்து சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏலக்காய், துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவேண்டும். அனைத்தையும் ஒன்றாக கலந்துவிடவேண்டும். கெட்டியாக எலுமிச்சை பழ அளவுக்கு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். அதை தனியாக வைத்துவிடவேண்டும்.
3. துணியை எடுத்துவிட்டு, மைதா மாவை மேலும் நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும். இதை நீங்கள் பேக்கிங் சோடா போட்டு பிசைந்திருப்பதால் அது நல்ல மிருதுவாக இருக்கும். அதில் கொஞ்சம் மாவை எடுத்து சிறு வட்டவடிவில் தட்டிக்கொள்ளவேண்டும். அதன் உள்ளே நீங்கள் பூரண உருண்டைகளை வைக்கவேண்டும் சுற்றியுள்ள மாவை வைத்து பூரணத்தை மூடி வாழையிலையில் வைத்து போலிகளை தட்டவேண்டும்.
4. அடுப்பில் தோசைக்கல்லை சூடாக்கி, அதில் தட்டியதை சேர்த்து இருபுறமும் நன்றாக வாட்டி எடுத்தால் சூப்பர் சுவையான போலி தயார். இருபுறமும் நெய்யை ஊற்றினால் மேலும் சுவையாக இருக்கும். பொன்னிறமாக வாட்டி எடுத்து மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளிடம் கொடுத்து பாருங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
5. இந்த பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் போலி உங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸ் ஆகிவிடும். இதை ஒருமுறை ருசித்தால் நீங்கள் தினமும் செய்து சாப்பிடுவீர்கள். இதை மாலை நேரத்தில் ஸ்னாக்ஸாக சாப்பிட்டுவிட்டு, ஒரு டீயை குடித்தால் அந்த மாலைப் பொழுதே இனிதாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்