ARTICLE AD BOX
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய்க்கான பகல்நேர பராமரிப்பு வசதிகளுக்கான மையங்களை அமைக்க தேவையான உள்கட்டமைப்பிற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயாளிகளுக்கு அவசியமான கீமோதெரபி சிகிச்சை, நாட்டின் அனைத்து நகரங்களிலும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் பகல்நேர புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதன்படி, புற்றுநோய் பகல்நேர பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இந்த மருத்துவமனைகளில் கீமோதெரபி சிகிச்சைக்கான வசதியுடன் கூடிய முழு சேவை உருவாக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்த வசதிகள் இல்லாத நகரங்கள், மாவட்ட மருத்துவமனைகளை கண்டறியும் பணிகளை தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக உயரதிகாரி கூறியது வருமாறு: நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி, அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து சுகாதார நிலையங்களிலும் பகல்நேர புற்றுநோய் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்த, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் ஆய்வு செய்யப்பட்டு உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் கண்டறியும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இவற்றை அமைப்பதற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.3,200 கோடியாக இருக்கும்.
இந்த நிதி மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல்நேர புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும். இவற்றில் 2025-26-இல் 200 மையங்கள் நிறுவப்படவுள்ளன.
இது நகர்ப்புறங்களுக்கு அருகேயுள்ள கிராமப்புற மக்களுக்கு தரமான புற்றுநோய் சிகிச்சை கிடைக்கப் பெறுவதை அதிகரிக்க வழிவகுக்கும். அவர்கள் பகல் நேரங்களில் சிகிச்சை பெற்று இரவில் வீடு திரும்ப முடிவும். இந்தப் பாரமரிப்பு மையங்கள் நான்கு முதல் ஆறு படுக்கைகளைக் கொண்ட மையங்களாக இருக்கும். கீமோதெரபி சிகிச்சை வழங்கப்படுவதோடு, புற்றுநோய் தடுப்பு, விழிப்புணர்வுத் திட்டங்களிலும் கவனம் செலுத்தப்படும்.
கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் மூன்றாம் நிலை புற்றுநோய் பராமரிப்பு மையங்கள் மற்றும் 19 மாநில புற்றுநோய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.3,000 கோடிக்கு அதிகமாக வழங்கியுள்ளது. தற்போது 22 எய்ம்ஸ் நிறுவனங்களிலும் புற்றுநோய் சிகிச்சை வசதிகள் உள்ளன.
மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்களில் புற்றுநோய் எதிர்ப்பிற்கான மருந்து விலை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. நாள்பட்ட புற்றுநோய்க்கான 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கும் அரசு சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளித்துள்ளது.
தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களில் 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாய்ப்புற்றுநோய் (26 கோடி பேர்), மார்பகப் புற்றுநோய் (14 கோடி பேர்), கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் (9 கோடி பேர்) போன்றவற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.