ARTICLE AD BOX
அமெரிக்காவில் புயல், காற்று காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல பேர் காயமடைந்துள்ளனர்.
உலகளவில் பல நாடுகளில் சீரற்ற காலநிலை ஏற்பட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. மழையாக இருந்தாலும் அதிக அளவிலான மழையும், வெயிலாக இருந்தாலும் அதிகளவிலான வெயிலும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
தற்போது அமெரிக்காவில் பென்சில்வேனியா, நியூயார்க், மத்திய அட்லாண்டிக் மற்றும் தென்கிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள் காற்று மற்றும் சூறாவளி ஆகியவற்றால் சேதமாகின. அதேபோல், மக்களின் நிலையும் மோசமாக உள்ளது.
தெற்கு, மத்திய மேற்குப் பகுதிகளைத் தாக்கிய புயல்கள் மார்ச் 16ஆம் தேதி கிழக்கு நோக்கி நகர்ந்தன. இதனால், சுமார் 340,000 க்கும் மேற்பட்டவர்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். மிசூரியில்தான் அதிக அளவு உயிர் சேதம் நிகழ்ந்திருக்கின்றது. ஐந்து மாவட்டங்களில் 12 இறப்புகள் என்றும் அந்த மாநிலத்தில் இன்னும் ஒருவர் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் 27 மாவட்டங்களில் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதாம். ஆர்கன்சோவில், மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அம்மாநில அவசர மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் 14 முதல் மார்ச் 16 மதியம் வரை 39 சூறாவளிகள் பதிவாகியுள்ளன. இதனால், இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “மொத்தமாக 36 அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. மேலும் பல வீடுகள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளன. சூறாவளி மற்றும் புயல்களைக் கண்காணித்து வருகிறோம். ஆர்கன்சோ மாநிலத்துக்குத் தேசிய காவல்படை அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோவிங்டன் மாவட்டத்தில் ஒரு மரணம், ஜெபர்சன் டேவிஸ் மாவட்டத்தில் இரண்டு மரணங்கள், வால்டால் மாவட்டத்தில் மூன்று மரணங்கள் என மொத்தம் ஆறு மரணங்கள் தமது மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன என்று மிசிசிப்பி ஆளுநர் டேட் ரீவ்ஸ் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.