ARTICLE AD BOX
புனேவில் உள்ள Swargate பஸ் டிப்போ என்பது அங்குள்ள பெரிய பேருந்து முனையங்களில் ஒன்று. அங்கு செவ்வாய்கிழமை காலை 5.45 மணிக்கு இளம் பெண் ஒருவர் சத்தாரா மாவட்டத்துக்குச் செல்வதற்கான பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அக்கா என்று அழைத்தபடி வந்த ஒரு நபர், சத்தாரா செல்வதற்கான பேருந்து வேறு ஒரு நடைமேடைக்கு வந்திருப்பதாக கூறியுள்ளார். அதைநம்பி அவருடன் சென்ற நிலையில், காலியாக நின்றிருந்த ஏசி பேருந்து ஒன்றை காட்டி சத்தாரா செல்வதற்கான பேருந்து இதுதான் என்று கூறியுள்ளார் அந்த நபர்.
பேருந்தில் மின்விளக்கு எதுவும் எரியாத நிலையில், அதில் ஏறுவதற்கு அந்த பெண் தயக்கம் காட்டியுள்ளார். இது சரியான பேருந்துதான் என்று அந்த நபர் அழுத்தம் கூறியதால் அவர் ஏறியுள்ளார். அப்பெண்ணை பின்தொடர்ந்து, பேருந்தில் ஏறிய அந்த நபர், இளம்பெண்ணை பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து, பாரதிய ஜனதா தலைமையிலான மஹாராஷ்ட்ரா அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர், தாத்தாத்ரே ராம்தாஸ் கடே என்றும் இவர் மீது ஏற்கனவே கொள்ளை, வழிப்பறி, செயின்பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய அந்த நபர் குறித்த தகவலை தெரிவித்தால் ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தத்தாத்ரே ராம்தாசை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.